×

இன்று பிற்பகலில் மோதல்; மும்பையை முடக்குமா சென்னை?: பெங்களூருடன் வாழ்வா, சாவா மோதலில் மல்லுக்கட்டும் டெல்லி

சென்னை: 16-வது ஐ.பி.எல். டி20 தொடரில் 49வது லீக் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இதுவரை ஆடியுள்ள 10 போட்டிகளில் சென்னை 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரகானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா சிறப்பாக பந்துவீசுகிறார். ஆனால் துஷர்தேஷ்பாண்டே (17 விக்கெட்), பதிரானா (7 விக்கெட்) ஆகியோர் கணிசமாக விக்கெட் எடுத்தாலும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவை ஏற்படுத்துகிறது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது. சென்னை ஏற்கனவே மும்பையை அவர்களது இடத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. எனவே இன்றும் மும்பையை முடக்க சிஎஸ்கே முயலும். சேப்பாக்கத்தில் இந்த சீசனில் சென்னை அணி 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றது.

மற்ற 2 போட்டியில் மயிரிழையில் கோட்டை விட்டது. அதே நேரத்தில் இந்த சீசனில் தொடக்கத்தில் திணறிய மும்பை தற்போது எழுச்சி கண்டிருக்கிறது. அந்த அணி ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டிகளில் 200-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது.

இவ்விரு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரைசதம் விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷனும் நல்ல பார்மில் உள்ளனர். கடந்த 3 ஆட்டங்களில் சோபிக்காத கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு வந்தால் மும்பையை கட்டுப்படுத்துவது சாதாரணமல்ல.

ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்களும் பிளே ஆப் வாய்ப்புக்காக சிஎஸ்கே வீரர்களும் வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தனது நிலையை இன்னும் திடப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சீசனில் ஏற்கனவே டெல்லியை வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். கிங் கோலி, டூபிளஸ்சிஸ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ரன்வேட்டை தொடர்ந்தால் பெங்களூரு அணியை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம்.

முதல் 5 போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி, கடைசி 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டுள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டும் `பிளே-ஆப்’ வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால், இது அவர்களுக்கு வாழ்வா-சாவா மோதலாக உள்ளது.

The post இன்று பிற்பகலில் மோதல்; மும்பையை முடக்குமா சென்னை?: பெங்களூருடன் வாழ்வா, சாவா மோதலில் மல்லுக்கட்டும் டெல்லி appeared first on Dinakaran.

Tags : chennai ,bangalore ,mallukkkat ,delhi ,16th I. GP ,49th league ,T20 ,Mumbai ,Sawa ,
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...