×

முற்றிலும் மாசடைந்து போன கெலவரப்பள்ளி அணை நுரை பொங்கி கோர முகத்தை காட்டும் தென்பெண்ணை ஆறு

* தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலம்
* கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

ஓசூர்: ஓசூர் அருகே, ரசாயன கழிவுகள் கலப்பால், முற்றிலும் மாசடைந்த கெலவரப்பள்ளி அணை தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தென்பெண்ணையாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி பெங்களூரு நகர் வழியாக, தமிழகத்தின் கொடியாளம் கிராமத்தின் அருகே தமிழக பகுதிக்குள் நுழைகிறது. அப்பகுதியில் காட்டாறு வெள்ளம்போல் பாய்ந்த தென்பெண்ணையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1993ம் ஆண்டு கெலவரப்பள்ளி பகுதியில், அணை கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 44.28 அடி கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, முப்போக சாகுபடி நடைபெற்று வந்தது. அணையின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டக்குறுக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

நாளடைவில், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரில் சரிபாதி பெங்களூரு நகர தொழிற்சாலை கழிவுகள் அடித்து வருவது அதிகரித்தது. அதே வேளையில், ஆகாய தாமரை ஆக்கிரமிப்பும் அதிகரித்தது. இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் ரசாயன கழிவுகள் அணையிலேயே வண்டலாக தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அணையிலிருந்து மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும்போது, நுரை பொங்கி வழிவது வாடிக்கையாக உள்ளது. அளவுக்கு அதிகமாக பொங்கும் நுரை, காற்றில் பறந்து சென்று வழிநெடுகிலும் உள்ள விளை நிலங்களில் படர்ந்து வருகிறது. ரசாயனம் கலந்த நுரை நாள் கணக்கில் மலைபோல் குவித்து கிடக்கிறது.

தண்ணீர் பீய்ச்சி அடித்தாலும் கரையாமல் அப்படியே உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘அணை தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதற்கு ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணம். நாள் கணக்கில் தேங்கிக் கிடக்கும் ஆகாய தாமரைகளால், அணைக்கு வரும் நீரில் அடித்து வரப்படும் ரசாயன கழிவுகள் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில், நுரை பொங்கி விளை நிலங்களில் பரவி வருகிறது. மேலும், கெலவரப்பள்ளி அணையை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் மாசடைந்துள்ளது. போர்வெல் மூலமாக எடுக்கப்படும் தண்ணீர் மிகவும் கலங்கலாக காணப்படுகிறது.

அதனை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 4 கி.மீ., தொலைவிற்கு சென்று மினரல் வாட்டர் வாங்கி வந்து பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அணை பகுதியில் கிடைக்க கூடிய மீன்கள் மிகவும் சுவை கொண்டதாக இருக்கும். தற்போது, மீன்கள் உற்பத்தி குறைந்து விட்டது. மேலும், கிடைக்க கூடிய மீன்கள் சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லை. எனவே, அணையில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றி சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post முற்றிலும் மாசடைந்து போன கெலவரப்பள்ளி அணை நுரை பொங்கி கோர முகத்தை காட்டும் தென்பெண்ணை ஆறு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli Dam ,Tenpenna River ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்