×

சுண்ணாம்பாறு படகு குழாமில் பேரடைஸ் கடற்கரை பகுதிகள் சீரமைக்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் சுண்ணாம்பாறு படகு குழாமில் பேரடைஸ் கடற்கரை பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
புதுச்சேரி சுற்றுலா தலங்களில் பெரிதும் விரும்பப்படும் இடமாக சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. இங்கு 80 நபர், 40 நபர், 30 நபர் மற்றும் 20 நபர்கள் செல்லக்கூடிய படகுகள் உள்ளன. 80 நபர் செல்லும் படகு-1, 40 நபர் செல்லும் படகு-2, 30 நபர் செல்லும் படகு-1 மற்றும் 20 நபர் செல்லும் படகுகள்-4 என இயந்திர படகுகளும், 4 நபர் செல்லக்கூடிய விரைவுப்படகுகள் 3ம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகளும் அதன் இயந்திரங்களும், கடந்த 7 மாதங்களாக பராமரிப்பு ஏதுமின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் 80 நபர் செல்லக்கூடிய படகு பழுதாகி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சரி செய்யப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. படகு குழாமில் உள்ள 8 படகுகள், இயந்திரங்கள் சரி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படகு சவாரி சரிவர நடைபெறாமல் வருவாய் குறைந்துள்ளது. அடுத்தாற்போல் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் வாட்டர் ஸ்கூட்டர் கடந்த காலங்களில் 3 படகுகள் இயக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பராமரிப்பு செய்யப்படாமல் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டது.

புதிய படகுகள் மற்றும் இயந்திரங்கள் எதையும் வாங்காமல் நிர்வாகம் செயலிழந்து படகு குழாமை முடக்கி போட்டு வருகிறது. படகு குழாமுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் பேரடைஸ் கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு இயங்கி வந்த பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் கடந்த ஒரு ஆண்டு காலமாக செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு உணவு வகைகளை விற்பனை செய்யும் அரசு உணவகங்கள் அதன் மேல் கூரைகள் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது.

அரசுக்கும், சுற்றுலாத்துறைக்கும் மிகவும் கணிசமான வருவாயை ஈட்டித் தரும், புதுச்சேரியின் முதன்மை சுற்றுலா இடமாக விளங்கும் சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை புதுச்சேரி அரசு நிறுவனமான புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏன் பராமரிக்காமல் வைத்துள்ளது என்று விசாரித்ததில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன‌. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புதுச்சேரி கவர்னர் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆஷாகுப்தா தற்போது சுண்ணாம்பாறு படகு குழாம் மேலாளராக உள்ள நிலையில் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே இதுபோன்ற சீர்கேடுகள் அரங்கேறி வருவதாகவும் புகார் எழுந்துள்ளன.

குறிப்பாக சில தனியார் நிறுவனங்களின் முதலாளிகளிடம் பேரம் நடப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. துறை அமைச்சரும் சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரைக்கு அடிக்கடி ஆய்வுக்கு சென்றும், இத்தகைய அவல நிலைகளை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை தொடர்ந்து தன்னாட்சி நிறுவனமான சுற்றுலா வளர்ச்சி கழகமே பராமரிக்க வேண்டும். அதை விடுத்து தனியாருக்கு தாரை வார்க்கும் சதி திட்டத்தை மேலாளரும், நிர்வாகமும் உடனே கைவிட வேண்டும் என சமூக அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஆட்சியில் புதுச்சேரியில் தனியார் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போதைய ஆட்சியிலும் அரசுக்கு சொந்தமான சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை சுற்றுலா தலங்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விடும் என்ற அச்சம் ஊழியர்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும், பொதுமக்களிடமும் நிலவுகிறது. புதுச்சேரி அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிட்டு சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை மறுசீரமைக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமே படகு குழாம் இருக்க வேண்டும். தனியாருக்கு லாபம் கொழிக்கும் சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை தனியாருக்கு தாரைவாக்கும் மேலாளரின் திட்டத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கவர்னர், முதல்வர், சுற்றுலா அமைச்சர், தலைமை செயலர், சுற்றுலா செயலர், இயக்குனர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுண்ணாம்பாறு படகு குழாம் ஊழியர்கள் சங்கமும் ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் பிடிடிசியின் வருமான களஞ்சியமான சுண்ணாம்பாறு படகு குழாமில் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு சீரமைத்து பாதுகாக்குமா? என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

The post சுண்ணாம்பாறு படகு குழாமில் பேரடைஸ் கடற்கரை பகுதிகள் சீரமைக்கப்படுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Limestone ,Puducherry ,Puducherry government ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு