×

தமிழ்நாடு-கேரள எல்லையில் மனதை வசீகரிக்கும் ஜில்…ஜில் சுற்றுலாத் தலங்கள்: கோடை விடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ண போலாமா குட்டி டூர்…

கூடலூர்: தமிழகத்தில் பள்ளிகள் தேர்வு முடிஞ்சாச்சு, பிள்ளைகளோட கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண ஒரு குட்டி டூர் போலாம்னா.. எப்பவும் ஊட்டி, கொடைக்கானல்னு போயி போரடிச்சு போச்சுன்னு நினைக்கிறீங்களா… நம்ம தேனி மாவட்டத்துக்கு பக்கத்துல இருக்கிற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துல்ல வெளியிலே தெரியாத அற்புதமான இடங்கள் எல்லாம் இருக்கு.. மலையாளக் கரையில மனதை வசீகரிக்கும் அந்த இடங்களைப் பத்தி கொஞ்சம் விரிவா பார்ப்போமா…

உற்சாக படகு சவாரிக்கு தேக்கடி: தேனி மாவட்டத்தில் தமிழக எல்லையான குமுளியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் சர்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு தேக்கடி ஏரியில் படகுச் சவாரி செய்யலாம். மேலும், இந்த வனப்பகுதியில் யானைச்சவாரி, டைகர் வியூ என சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்யும் பல சிறப்பு அம்சங்களும் உண்டு. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் வனத்துறையினரின் படகுகள் தேக்கடி நீர்தேக்கப் பரப்பில் சவாரி சென்று வருகின்றன.

அக்னியிலும் வேர்க்காத ராமக்கல் மெட்டு: அக்னி வெயிலிலும் வேர்க்காத இடம் உண்டா… கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல… ஆனா இருக்கு. கம்பம்மெட்டிலிருந்து 13 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ராமக்கல் மெட்டு என்னும் ஒரு இடம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதி ஆசியாவில் அதிக காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் அக்னி நட்சத்திர வெயிலிலும் வேர்க்காது என்கின்றனர். இங்குள்ள குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை சுற்றுலாப் பயணிகளை கவரும். இங்கிருந்து பைனாகுலர் முலம் தமிழகத்தின் இயற்கை எழிலையும், கண்டு ரசிக்கலாம்.

ஆசியாவின் 2வது பெரிய அணை: கம்பம்மெட்டிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது ஆசியாவின் 2வது பெரிய இடுக்கி அணை. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் அணையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர். இந்த அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது திரில்லான அனுபவம்.

திரைப்பட நகரமான வாகமண்: குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கி.மீ உள்ளது வாகமண். கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக் குன்றுகள், பைன் மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், ஏரியில் கால்மிதி படகு சவாரி ஆகியவை ரசிக்க வேண்டியவை. தற்போது வாகமண் திரைப்பட நகரமாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப்பிரதேசம்.

வனவிலங்குகளை ரசிக்க: தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கெவி என்னும் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் ‘ஜங்கிள் சபாரி’ என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 16 கி.மீ வரை செல்லும். 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாகவும், ரூ.50 நுழைவுக் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

குறிஞ்சி மலர்களை ரசிக்க: குமுளியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் பருந்தும்பாறை உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள இயற்கை அழகும், தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும், குறிஞ்சி மலர்களும் ரசிக்கக்கூடியவை.

அஞ்சுருளி: கம்பம்மெட்டில் இருந்து 22 கி.மீ தொலைவில் கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் அஞ்சுருளி உள்ளது. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டன்னல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. இரட்டையார் முதல் அஞ்சுருளி வரை 5.5 கி.மீ நீளமும், 20 அடி அகலமும் உள்ள இந்த டன்னல் 1974ல் தொடங்கி 1980ல் முடிக்கப்பட்டது. ஐந்து உருளி (அண்டா) கவிழ்த்தி வைத்தது போல் மலைகள் இருந்ததால், ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப் பெயரிட்டுள்ளனர். இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

அம்மச்சி கொட்டாரம்: குமுளியிலிருந்து 35 கி.மீ தூரத்திரல் குட்டிக்கானம் அருகே 200 ஆண்டு பழமையான அம்மச்சி கொட்டாரம் உள்ளது. இப்பகுதி பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனமரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ராணி சேதுலட்சுமி பாய், திருவிதாங்கூரின் கோடைகால தலைநகராக இந்த அம்மச்சிக் கொட்டாரத்தைப் பயன்படுத்தினார். இந்த அரண்மனையிலிருந்து இரண்டு ரகசிய நடைபாதைகளும், ஒரு சுரங்கப்பாதையும் உள்ளன. 5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து பீர்மேடு ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறது என்கின்றனர்.

உறும்பிக்கரை மலைகள்: குமுளில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் குட்டிக்கானம் மற்றும் வாகமணுக்கு இடையே கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கிறது உரும்பிக்கரை மலைகள். பாறைகள் நிறைந்த காட்டுப்பாதை வழியாக மேல்நோக்கி சாகச பயணம் செல்லும் பயணிகளுக்கு மூடுபனி மலைகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் கண்களுக்கு குளிர்ச்சியானவை. பாப்பானி மற்றும் வெள்ளப்பாறை அருவிகள் பார்க்கவேண்டியவை. மலை உச்சிக்கு சென்றால் இங்கிருந்து இயற்கை காட்சிகளை 360 டிகிரியில் ரசிக்கலாம்.

The post தமிழ்நாடு-கேரள எல்லையில் மனதை வசீகரிக்கும் ஜில்…ஜில் சுற்றுலாத் தலங்கள்: கோடை விடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ண போலாமா குட்டி டூர்… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Pampanna ,Polama ,Cuddalore ,Kerala Border ,Palana ,Polama Kutty ,
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...