ராஜபாளையம், மே 6: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் சொத்து தகராறில் முதியவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (62). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், இவரது சித்தப்பா மகனுக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இந்த நிலையில் நேற்று ரெங்கசாமி தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(22), குடிபோதையில் வந்து, ரெங்கசாமியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், ராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி மற்றும் சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள சேத்தூர் போலீசார், கண்ணனை கைது செய்துள்ளனர். இருப்பினும் ரெங்கசாமியின் உறவினர்கள் கூறுகையில், ‘சொத்துத் தகராறு காரணமாக ரெங்கசாமியின் சித்தப்பா மகன், கூலிப்படையை ஏவி, அவரை கொலை செய்துள்ளார்’ என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரெங்கசாமியின் சித்தப்பா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதியவர் சரமாரி வெட்டிக் கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.