×

மதுராந்தகம், செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழையில் மூழ்கி வீணான நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லோசன மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் இரவும் பகலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு அறுவடைக்காக காத்திருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் கனமழையின் காரணமாக நீரில் மூழ்கி அழுகிப்போனது. மேலும், பல நூறு ஏக்கர் நெல் பயிர்கள் அறுவடைக்கு முன்பே முளைத்துப் போனது.

இதனால், பணம் செலவழித்து நெல் பயிரிட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, நெல் விவசாயத்திற்கு புகழ்பெற்ற செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இந்த கனமழையால் பெயரிடப்பட்ட நெல்பயிர் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘பல இடங்களில் கடன் வாங்கி நிலம் குத்தகை எடுத்து ஆர்வத்துடன் நெல் பயிரிட்டேன். ஆனால், அறுவடைக்கும் முன் எதிர்பாராத விதமாக பெய்த கனமழையால் எனக்கு சொந்தமான 7 ஏக்கரில் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. தற்போது, என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறேன். இதேபோன்று, கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். எங்கள் நஷ்டத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மதுராந்தகம், செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழையில் மூழ்கி வீணான நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Seyyur ,Chengalpattu ,Seiyur ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...