×

ஆவடி மாநகராட்சியில் ரூ.9.5 கோடியில் நலத்திட்ட பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 9.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர். அதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 33வது வார்டு கோணாம்பேடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அதேபோல் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 35 சாலைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 30வது வார்டு பிருந்தாவன் காலனி பகுதியில் தார்ச்சாலை பணிகளையும், 15வது வார்டு மருதம் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். இந்நிலையில், அடிக்கல் நாட்ட வருகை தந்த அமைச்சர் நாசரை பொதுமக்கள் பூக்களை கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், கிழக்குப் பகுதி செயலாளர் பேபி சேகர், பகுதி செயலாளர்கள் பொன் விஜயன், ஜி.ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், ஜோதிலட்சுமி, கு.சேகர், பொறியாளர் ரவிசந்திரன், மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ஆவடி மாநகராட்சியில் ரூ.9.5 கோடியில் நலத்திட்ட பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Aavadi Corporation ,Minister S.M. Nasar ,Aavadi ,Minister S.M. Nasser ,Avadi Corporation ,Minister ,S.M. Nasser ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு