×

கோடை சீசன் துவக்கம் எதிரொலி பழநி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

 

பழநி: கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் பழநி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் பழநி அடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் பக்தர்கள் அதிகளவு நடமாடுகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக எண்ணற்ற கடைகள் இச்சாலையில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரிவீதியின் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பஸ்கள், தண்ணீர் லாரிகள் போன்றவை அதிகளவு செல்கின்றன. ஏற்கனவே ஆக்கிரமிப்பில் அகப்பட்டு சாலை குறுகலாக இருக்கும் நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

அலகு குத்தியும், பல்வேறு வகையான காவடிகள் எடுத்தும் பக்தர்கள் கிரிவீதிகளில் அதிகளவு வலம் வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் கனரக வாகனங்கள் இச்சாலைகளில் செல்லும்போது பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. நாளை மறுதினம் அக்னி நட்சத்திர கழு திருவிழா துவங்குகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவீதியில் கிரிவலம் வருவர். எனவே, சீசன் முடிவடையும் வரை கிரிவீதியில் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, பைபாஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோடை சீசன் துவக்கம் எதிரொலி பழநி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Kriveedi ,Palani ,Palani Girivedi ,Girivedi ,Dinakaran ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது