×

உதவி பொறியாளர் பழிவாங்குவதாக கூறி மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி: நீதிபதியிடம் பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: புளியந்தோப்பில், உதவி பொறியாளர் பழி வாங்கும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறி, மாநகராட்சி ஊழியர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முனுசாமி (54). திருவிக நகர் 6வது மண்டலத்தில் 72வது வார்டில் உதவி பொறியாளர் அலுவலகத்தில் மலேரியா பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்த இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன், இந்த வார்டில் சாலை மற்றும் கட்டிடங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டு, வேலை செய்து வந்தார். இந்நிலையில், வேலை பளு காரணமாக மீண்டும் தன்னை மலேரியா பிரிவுக்கு மாற்றும் படி, 72வது வார்டு உதவி பொறியாளர் தினேஷிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 1 மாதமாக முனுசாமியை வேலைக்கு எடுக்காமல், தினேஷ் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு சுகாதாரத்துறை அலுவலர் தங்கராஜ் என்பவரும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் முனுசாமியிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, மீண்டும் வேலைக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முனுசாமி நேற்று காலை 8 மணிக்கு புளியந்தோப்பு வஉசி நகர் 1வது தெருவில் உள்ள 72வது வார்டு அலுவலகத்திற்கு வந்து உதவி பொறியாளர் தினேஷிடம், தன்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார். அவர் மறுக்கவே முதல் மாடியில் உள்ள தினேஷ் அலுவலகத்திற்கு சென்று, கையில் வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் முழுவதும் 63 சதவீத தீக்காயங்களுடன் முனுசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட முனுசாமியிடம் நேற்று மாலை 13வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சக்திவேல் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அதில் கடந்த 1 மாதமாக உதவி பொறியாளர் தினேஷ், தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் நடத்தியதாகவும், இதற்கு சுகாதாரத் துறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் துணையாக இருந்ததாகவும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முனுசாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதவி பொறியாளருக்கும், மாநகராட்சி ஊழியருக்கும் மேற்பட்ட பிரச்சனையில் உதவி பொறியாளரின் அலுவலகத்திற்கே சென்று, மாநகராட்சி ஊழியர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உதவி பொறியாளர் பழிவாங்குவதாக கூறி மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி: நீதிபதியிடம் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Pulyanthope ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...