×

கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 2021-22 நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், மதுரை மாவட்டம் சோழவந்தான், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட அயனாவரம் வட்டம், பெரவள்ளூர், ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தையும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மவுண்ட் ரோடு அருகே காயிதேமில்லத் கல்லூரி அருகே உள்ள மதரசா பள்ளி வளாகம் அருகில் உள்ள இடத்தையும் அதிகாரிகளுடன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிற புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அப்துல்லா எம்பி, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, செயற்பொறியாளர் புஷ்பலிங்கம் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

* சென்னையில் சர்வதேச விளையாட்டு போட்டி
எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 3 முதல் 13ம் தேதி வரை ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. சர்வதேச அளவிலான இப்போட்டியை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

The post கொளத்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kolathur, Chepakkam ,Thiruvallikkeni ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Kolathur ,Chepakkam ,Tiruvallikkeni ,Udhayanidhi Stalin ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...