×

காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாவ, புண்ணியம் கணக்குகளை எழுதுபவராக நம்பப்படும் சித்ரகுப்தர் சுவாமிக்கென்று தனி கோயில் தென்னிந்தியாவிலேயே காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுக்காரத்தெருவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பட இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் இப்படி ஏராளமானோர் வருகை தந்து, சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, விளக்கேற்றி மனதார வேண்டி செல்வர்.

இத்தகைய, உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்தர் கோயில் நேற்று முன்தினம் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி சித்ரகுப்தர் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது‌. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மற்றும் கோயிலின் திருப்பணி காரணமாக, சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி ஸ்ரீ கர்ணகி அம்மாள் உடனுறை சித்திரகுப்தர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

விழாவில், உற்சவர் சித்திரகுப்தர் மற்றும் கர்ணகி சுவாமிக்கு திருமணம் நடைபெற்று, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சித்ரா பவுர்ணமி விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

The post காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chitra Poornami Festival ,Chitragupta Temple ,Kancheepuram ,Kanchipuram ,Chitra Pournami festival ,Kanchipuram Chitragupta Temple ,Sami.… ,
× RELATED தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு...