×

விழாக்கோலம் பூண்டது இங்கிலாந்து இன்று மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா

லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெறுகின்றது. இதற்காக லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது மகனான மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள அபே தேவாலயத்தில் இன்று மிக பிரமாண்டமாக அரச பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை வரை இந்த விழா நடைபெறும்.

70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு முடிசூட்டு விழா நடைபெறுகிறது. எனவே இங்கிலாந்து விழாக்கோலம் பூண்டுள்ளது. கோலாகலமாக விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் உள்ளிட்டவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமருவார். பிறகு மூத்த மதகுருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்படும். தொடர்ந்து ராணியாக கமிலா முடிசூட்டிக்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் மாடத்தில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். முடிசூட்டு விழா ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும். விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முடிசூட்டு விழா கொண்டாட்டங்களை மக்கள் கண்டு களிக்கும் வகையில் 8ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* துணை ஜனாதிபதி பங்கேற்பு
இந்தியாவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் தனது மனைவியுடன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சமையல்கலைஞர் மஞ்சு மால்கிகிற்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் லண்டனில் சிறப்பான தொண்டு பணிகளுக்காக இங்கிலாந்து அரசின் பதக்கத்தை இவர் பெற்றுள்ளார்.

* விழாவில் பைடன் மனைவி
இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் புறப்பட்டு சென்றார். அவர் தனது டிவிட்டரில் “70 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்க சென்றுள்ளேன்,” என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் எவரும் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றதில்லை.

* மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து தங்கமூலாம் பூசப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் அபே வருவார்கள்.

* தேவாலயத்தில் நுழைந்தவுடன் தலையில் எட்வர்டின் கிரீடம் சூட்டபப்டும். அவர் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்படுவார். மன்னர், ராணி மீண்டும் ஊர்வலமாக அரண்மனைக்கு செல்வார்கள்.

* பக்கிங்காம் அரண்மனையில் ராணுவத்தினரின் அரச மரியாதையை ஏற்றுக்கொள்வார்கள்.

* அரசு குடும்பத்தின் உறுப்பினர்களை சந்தித்து மகிழ்வார்கள்.

* இங்கிலாந்து மன்னர்கள் பயன்படுத்திய 700 ஆண்டு பழமைவாய்ந்த தங்க முலாம் பூசப்பட்ட அரியாசனம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

The post விழாக்கோலம் பூண்டது இங்கிலாந்து இன்று மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா appeared first on Dinakaran.

Tags : King Charles III ,England ,London ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது