×

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகிறது

சென்னை: வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. பிற மாவட்டங்களில் வெயில் நிலவியது. கரூர், ஈரோடு பகுதிகளில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. திருத்தணி, நாமக்கல், சேலம், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் 97 டிகிரியும், சென்னையில் 96 டிகிரியும் நிலவியது. மேலும், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வாய்ப்புள்ளது.

இதுதவிர, சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் 3 டிகிரி வரை வெப்ப நிலை குறைந்தும் காணப்பட்டது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக அந்த பகுதியில் 7ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதி , மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி, தெற்கு அந்தமான் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் இன்று வீசும். 7ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் தெற்கு பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசும். 8, 9ம் தேதிகளிலும் சூறாவளிக் காற்று வீசும். இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகிறது appeared first on Dinakaran.

Tags : Moka Storm ,Tamil Nadu ,Bengal Sea ,Chennai ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து