×

திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மிசா.பி.மதிவாணன், 1973ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில் ஒன்றியக் கழகத்தின் பொறுப்பாளராக 2003 வரையிலும் கட்சிப்பணியாற்றியவர்.

பின்னர் தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாய தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் என மேலும் பல்வேறு கட்சி பொறுப்புகளைச் சிறப்புற வகித்தவர். 1993ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கலைஞரை திமுக தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா.பி.மதிவாணனும் ஒருவர் ஆவார். இவற்றை எல்லாம் விட, 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், மிசா காலக்கட்டத்தில் ஓராண்டு சிறைவாசமும் அனுபவித்த பெருமைக்குரிய திமுக போராளி ஆவார்.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் திமுகவின் முப்பெரும் விழாவை, மூன்று நாட்கள் விழாவாக நடத்திப் பெருமை சேர்த்தவர். திமுகவுக்கு இவர் ஆற்றிய பெரும்பணிகளுக்கான அங்கீகாரமாக, பெரியார் விருது பெற்றவர். இத்தகைய பெருமைகளுக்குரிய திமுக முன்னோடி மிசா.பி.மதிவாணனின் மறைவு, திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திமுக வரலாற்றில் அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Misa P. Madhivanan ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Misa P. Mathivanan ,M.K.Stalin ,Misa.P.Mathivanan ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்