×

சென்னையில் எதிர்ப்புகளை மீறி 13 திரையரங்குகளில் வெளியானது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்: வடபழனி வணிக வளாகத்தில் பேனர்கள் கிழிப்பு

சென்னை: முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை மீறி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சென்னையில் 13 திரையரங்குகளில் நேற்று வெளியானது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதேநேரம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவிதித்திருந்தன.
இதை தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கினர். சென்னையை பொறுத்தவரை ராயப்பேட்டை, வடபழனி, அண்ணாநகர் என 13 பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நேற்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டது. எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க அந்தந்த திரையரங்குகள் முன்பு உதவி கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக, வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வணிக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசாரின் தடுப்புகளை மீறி வணிக வளாகத்திற்குள் நுழைந்து திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அதோடு இல்லாமல், திரையரங்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வணிக வளாகத்திற்குள் நுழைந்த தமுமுக வினர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம், பரபரப்பு நிலவியது.

The post சென்னையில் எதிர்ப்புகளை மீறி 13 திரையரங்குகளில் வெளியானது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்: வடபழனி வணிக வளாகத்தில் பேனர்கள் கிழிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadapalani mall ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...