×

மணிப்பூரில் இருசமூகத்தினர் மோதலால் பதற்றம் இயல்பு நிலை திரும்புகிறது: ரயில் சேவை நிறுத்தம்; கூடுதல் படைகள் விரைவு

இம்பால்: மணிப்பூரில் அமைதி திரும்பும் வரை ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலா மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடியல்லாத மெய்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து தர எதிர்ப்பு தெரிவித்து நாகா, குகி உள்ளிட்ட மணிப்பூரின் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் 8 மலை மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை ‘பழங்குடியினர் ஒற்றுமை அணி வகுப்பு‘ நடத்தினர். இதற்கு எதிராக மெய்டீஸ் சமூகத்தினரும் பேரணி நடத்தினர். அப்போது இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

இதையடுத்து மணிப்பூரில் வன்முறையை தூண்டும் வகையில் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இம்பால் நகரில் தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்துள்ளது. ஒருசில பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. ராணுவம், நாகாலாந்து படைபிரிவு வீரர்கள், அசாம் ரைபிள்ஸ் படையினர் உள்பட 6,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைவரின் ஒத்துழைப்புடன் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வன்முறை காரணமாக மணிப்பூருக்குள் எந்த ரயில்களும் இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பும் வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய ஆயுத போலீஸ் படைகள், எல்லை பாதுகாப்பு படை உள்பட 20 கூடுதல் படைப்பிரிவுகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

* அமித் ஷா தேர்தல் பிரசாரம் ரத்து
மணிப்பூர் வன்முறையை அடக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ரத்து செய்துள்ளார். மிசோரம் மக்களை மீட்க நடவடிக்கை மணிப்பூரில் வசிக்கும் மிசோரம் மக்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்தார். மிசோரமில் வசிக்கும் மணிப்பூர் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூரில் இருசமூகத்தினர் மோதலால் பதற்றம் இயல்பு நிலை திரும்புகிறது: ரயில் சேவை நிறுத்தம்; கூடுதல் படைகள் விரைவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Northeast Frontier Railway ,Manipur… ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...