×

பாதசாரிகள் வசதிக்காக சாந்தோம் பகுதியில் சுரங்க நடைபாதை: நதிகள் சீரமைப்பு கழகம் திட்டம்

சென்னை: சென்னை சாந்தோம் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்க சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகள் வசதிக்காக நடை சுரங்க நடைபாதை அமைக்கவும், ஏற்கனவே உள்ள பாலத்தில் நீர்வழிப் பாதையை மேம்படுத்தவும் சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் முடிவு செய்துள்ளது.

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து அடையாறு செல்வதற்கு டி.ஜி.எஸ்.தினகரன் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரத்தில் இந்த சாலையில் பாதசாரிகள் கடப்பதால் மேலும் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் அடையாற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கீழ் நீர்வழிப் பாதை உள்ளது. இதனை மேம்படுத்த சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் முடிவு செய்துள்ளது. இதனுடன் சேர்த்து, லூப் சாலையில் இருந்து மந்தைவெளி செல்லும் தெற்கு கால்வாய் சாலையை இணைக்க சாந்தோம் நெடுஞ்சாலை குறுக்கில், சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சாந்தோம் பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், தேவாலயம், திருமண மண்டபம், ஏராளமான கடைகள் உள்ளதால், சிக்னல் பகுதியை பொதுமக்கள், மாணவர்கள் கடப்பதற்கு காலை, மாலை நேரங்களில் சிரமப்படுகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பாதசாரிகள் வசதிக்காக இந்த சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,’’ என்றனர்.

The post பாதசாரிகள் வசதிக்காக சாந்தோம் பகுதியில் சுரங்க நடைபாதை: நதிகள் சீரமைப்பு கழகம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Xanthom ,Rivers Reclamation Corporation ,CHENNAI ,Chennai Rivers Rehabilitation Corporation ,Chandhom ,Santhome ,Rivers restoration ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...