×

ஏஎஸ்பி, போலீசார் மீது 3வது வழக்கு பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐஜி தலைமையில் விசாரணை: பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிபிசிஐடியிடம் மனு

நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில் சாட்சிகள் தயக்கமின்றி ஒத்துழைக்க ஐஜி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிபிசிஐடி ஏடிஎஸ்பியிடம் புதிய மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பை போலீஸ் சப் டிவிசனுக்குட்பட்ட அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக புகார்கள் வந்ததின் பேரில் அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை தமிழ்நாடு அரசு நியமித்தது. அவர் நடத்திய 2 கட்ட விசாரணை அறிக்கையின்படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு ஏடிஎஸ்பி சங்கர் நியமிக்கப்பட்டார். ஏஎஸ்பி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகள் தொடர்பாக நேற்று (5ம் தேதி) சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு புகார்தாரர்களான கணேசன், அருண்குமார், 2 சிறுவர்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகிய 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, அருண்குமாரின் சகோதரர், 17 வயது சிறுவன், அவரது தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் பாண்டியராஜன், மாடசாமியுடன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்கள் ஏடிஎஸ்பி சங்கரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ‘ஐஜி தலைமையிலான அதிகாரியின் மேற்பார்வையில் விசரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணைக்கு சாட்சிகள் ஒத்துழைப்பார்கள்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் விசாரணை நேற்று நடைபெறவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் வேதநாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஏஎஸ்பி பல்வீர்சிங், எஸ்ஐ முருகேசன், காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் சிலர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் 3வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஏஎஸ்பி, போலீசார் மீது 3வது வழக்கு பல் பிடுங்கிய விவகாரத்தில் ஐஜி தலைமையில் விசாரணை: பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிபிசிஐடியிடம் மனு appeared first on Dinakaran.

Tags : IG ,ASP ,CBCID ,Nellai ,
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...