×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கோலாகலம் 25 லட்சம் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்று கிரிவலம் சென்றால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. எனவே, சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகு கோலாகலகமாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோபூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

அதிகாலை முதல் இரவு 11 மணிவரை நடை அடைப்பு இல்லாமல், தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளிபிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 11.58 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 11.35 மணிக்கு நிறைவடைந்தது.

அதையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் இருந்தே விடிய விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை தொடங்கி இரவு விடிய, விடிய சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சன்னதிகளை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் நீர், மோர், பழச்சாறு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் சுமார் 6 ஆயிரம் நடைகள் இயக்கப்பட்டன. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 3 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள் உள்பட மொத்தம் 4,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* 10 கோயில் பிரசாதங்கள் ஒரே இடத்தில் விற்பனை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில், தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற 10 கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும் என கடந்த மாதம் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, கிரிவலப்பாதையில் நேற்று அறநிலையத்துறை சார்பில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாத விற்பனை மையம் 3 இடங்களில் அமைக்கப்பட்டது. அதில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிளகு வடை மற்றும் அதிரசம், பழனி தண்டாயுதபாணி கோயில் பஞ்சாமிர்தம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கோடி தீர்த்தம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிரசம், சமயபுரம் மாரியம்மன் கோயில் குங்குமம், பண்ணாரி அம்மன் கோயில் ராகி லட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம், அழகர் கோயில் கள்ளழகர் கோயில் சம்பா தோசை, சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயில் தினை மாவு, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் அதிரசம், தேன்குழல் ஆகியவை தனித்தனி விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பவுர்ணமி கிரிவலத்தின்போதும், பிரசாதம் விற்பனை செய்யப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கோலாகலம் 25 லட்சம் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami Kolakalam ,Tiruvannamalai ,Krivalam ,Sami Darshan ,Thiruvannamalai ,Chitra Poornami festival ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...