×

கேரள பைனான்ஸ் நிறுவனத்தின் ரூ.143 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: கேரளாவில் இருந்து செயல்பட்ட பிரபல பைனான்ஸ் நிறுவனத்தின் ரூ.143 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திரிசூரில் உள்ள பிரபல பைனான்ஸ் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், அதன் நிர்வாக இயக்குநர் வி.பி.நந்தகுமாரின் 8 வங்கிக் கணக்குகள் உட்பட ரூ.143 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.பி.நந்தகுமார், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும், பைனான்ஸ் நிறுவனப் பங்குகளிலும், அசையா சொத்துக்களில் விதிமுறைகளை மீறி பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை நடத்திய போது சுமார் 60 சொத்துக்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர் அக்ரோ ஃபார்ம்ஸ் (மேக்ரோ) என்ற நிறுவனம் மூலம் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி செய்த பணமோசடி மற்றும் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் செய்துள்ளார். அவரது பைனான்ஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளை அலுவலகங்களில் சட்டவிரோதமாக டெபாசிட்களை செய்துள்ளார். அதன்படி சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட ரூ. 143 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post கேரள பைனான்ஸ் நிறுவனத்தின் ரூ.143 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala Finance Company ,New Delhi ,Directorate of Enforcement ,Celebrity Finance Company ,Kerala ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...