×

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்: நாளை மறுநாள் விவசாய அமைப்புகள் களம் இறங்குவதால் பதற்றம்

புதுடெல்லி: டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவாலை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாளை மறுநாள் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் குதிக்கின்றன. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவரை கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப். 23ம் தேதி முதல் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும், டெல்லி இதில் போலீசாருக்கும் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆம்ஆத்மி எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை சந்திப்பதற்காக, டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் ஜந்தர் மந்தருக்கு சென்றார். ஆனால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘போராட்டக்காரர்களை சந்திக்க சென்ற என்னை போலீசார் அனுமதிக்கவில்லை. என்னை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டேன். டெல்லி போலீசார் என்னிடம் குண்டர்களைப் போல நடந்து கொண்டனர். எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்விவகாரத்தில் போராட்டம் நடத்திய வீராங்கனையை, மகளிர் ஆணைய தலைவி சந்திக்க சென்ற போது அவர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

இவரது கூற்றுகளுக்கு பதிலளித்த டெல்லி காவல்துறை துணை ஆணையர், ‘மகளிர் ஆணைய தலைவி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார்’ என்றார். இந்நிலையில் ஜந்தர் மந்தரில் போராடும் வீராங்கனைகளுக்கு, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மிகப்பெரிய விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் சிங் கூறுகையில், ‘வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 7ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தும். பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஜந்தர் மந்தரை அடைந்து போராட்டம் நடத்துவார்கள். இதுதவிர, பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் போராட்டம் நடக்கும்’ என்றார். டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீராங்கனைகளின் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், விவசாய அமைப்புகளும் வரும் 7ம் தேதி போராட்டத்தில் இணைவதால் மேலும் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

The post டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்: நாளை மறுநாள் விவசாய அமைப்புகள் களம் இறங்குவதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Women's Commission ,Delhi ,New Delhi ,Swati Maliwal ,Dinakaran ,
× RELATED விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக...