×

எங்கும் நிறைந்த சிங்கப் பெருமாள்

இந்தத் தலத்திற்கு சிங்கப்பெருமாள் கோயில் என்றே பெயர். மலையைக் குடைந்து பல்லவர்கள் பாணியில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் இது. நரசிம்மர் அகக்குகையான இருதயத்தில் வசிப்பதாக வேதங்கள் விவரிக்கின்றன. எனவே, இங்கு புறத்திலும் கற்குகைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார். சந்நதிக்கு அருகே நுழையும்போதே துளசியும், பச்சைக் கற்பூரத்தின் மணமும் மெல்ல மனதை வருடும். மெல்ல கண்மூட வைக்கும். சட்டென்று பெரிய பெருமாளைப் பார்க்க மனம் ஒன்றாய் குவியும்.

வலது காலை அழகாய் மடித்து, இடது காலை கீழே அழுத்தமாய் படரவிட்டு ஆஜானுபாகுவாய் ராஜ சிம்மமாய் அருள் பொழிகிறார். உக்கிர நரசிம்மராய் அமர்ந்ததால் நெற்றிக்கு நடுவே மூன்றாவது கண் அதாவது, த்ரிநேத்ரதாரியாய் காட்சி தருகிறார். பிரகலாதன், அவன் தந்தை ஹிரண்யகசிபு தன் பிறப்பின் ரகசியம் மறந்திருந்தான். தன்னை தேவனாக்கி தொழுது நில் என்று தொடை தட்டி அமர்ந்தான். அசுரனாய் பிறந்ததினாலே தேவனையும், தேவத் தலைவனையும் எதிர்த்தான்.

‘‘நானே உனக்குத் தலைவன்… நீ வழிபட வேண்டியவன் எங்கோ உறங்கிக் கொண்டிருப்பவனல்ல, உன் எதிரே இருக்கும் இந்த ஹிரண்யன்தான் உன் வழிபாட்டிற்-குரியவன்’’ என்று வழிபடாதவர்களை வகிர்ந்தான். ஹிரண்யனின் கண்கள் தீக்கங்குகளாய்க் குமுறின. ‘‘என் தந்தை வெறும் கருவி. அதை இயக்குபவன் நாராயணன். அவரைச் சரணடையுங்கள். அவர் பாதம் பற்றிடுங்கள். தந்தை பற்றிய பயம் அறுத்திடுங்கள்’’ என்று நிதானமாய், தீர்க்கமாய் பேசினான்.

இவ்வாறு பிரசாரம் செய்துகொண்டிருந்த பிரகலாதனுக்குப் பின்னால் ஒரு அசுர வீரன் கோரப்பல் காட்டிச் சிரித்தான். தந்தை அழைத்துவரச் சொன்னார் என்றான். ‘நாராயணா’ என்று சொல்லி பிரகலாதன் பின்னே சென்றான். ‘‘மூவுலகங்களும் என் பெயர் சொன்னால் குலுங்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? என் குலப் பெருமை உன்னால் குன்றினால் உன்னை கொன்று போடவும் தயங்க மாட்டேன். இந்த உலகத்திற்கு அதிபதி யார்? இப்போதே சொல்!’’ என்று அவனைப் பார்த்துக் கேட்டான் ஹிரண்யன்.

தந்தை எதிரே தலை தாழ்த்தி தர்மத்தை அழகுபட கூறினான், பிரகலாதன்: ‘‘நீர் எனக்கு தந்தை. நாராயணரோ நம் எல்லோருக்கும் தந்தை. அண்டமும், இந்தப் பிண்டமும், சகஸ்ர கோடி உலகங்களும் எந்தப் புருஷனால் சிருஷ்டிக்கப் பட்டதோ, எவரால் பரிபாலிக்கப்படுகிறதோ அவரே உமக்கும், எமக்கும், அகிலத்துக்கும் தந்தை. அவரே அதிபதி.’’ ஹிரண்யன் வெறி பிடித்ததுபோல் அலறினான். மகனை அந்தரத்தில் தூக்கினான். அப்படியே வீசி எறிந்தான். ‘‘சாகும் தருணத்தில் பேசுவதுபோல் பேசுகிறாய். பெரிய பண்டிதன் போல் உபதேசிக்கிறாய்.

உன்னை என்ன செய்கிறேன் பார்’’ என்று அசுரர்களைப் பார்த்தான். அவர்கள் பிரகலாதனை கொத்தாய் பிடித்து தூக்கிப் போனார்கள். மதம் கொண்ட யானையை அவிழ்த்து விட்டார்கள். களிறு கட்டுக் கடங்காது பாய்ந்து வந்தது. பிரகலாதன் கண்கள் மூடினான். பாய்ந்து வந்த யானை மெல்ல நின்றது. பின்னோக்கி பதுங்கி நகர்ந்தது. மண்டியிட்டு அமர்ந்தது. தும்பிக்கையை உயரத் தூக்கி பிரகலாதனை தொழுதது. அசுரர்கள் உறைந்தார்கள். ஓடிப் போய் அரக்கத் தலைவனிடம் சொன்னார்கள். அவன் ஆவேசமானான். பிரகலாதன் கண் விழித்தான்.

எதிரே இருந்த யானையை ஆதூரமாய் தடவிக் கொடுத்தான். அரண்மனைக்குள் நுழைந்தான். அதற்குள் ஹிரண்யன் அகங்காரச் சிகரம் தொட்டு விட்டிருந்தான்.

‘‘இந்த ஜகத்திற்கு அதிபதி அந்த நாராயணன் என்று சொன்னாயே, அவன் எங்குமிருக்கிறானா?’’

‘‘அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறார்!’’

‘‘அப்படியெனில் இங்கே உள்ளானா அவன்?’ என்று ஒரு கம்பத்தைக் காண்பித்தான். அந்த கம்பம் எனும் அசையாத மையச் சக்தியை தன் அகங்காரம் எனும் கதையால் அடிக்க, அது வெடிச்சிதறலாய், பேரிடியாய் ஒலி முகிழ்க்க, அந்த மையச் சக்தி முற்றிலும் வேறொரு ரூபத்தில் கிளர்ந்தெழுந்தது. மூவுலகமும் அதிர்ந்தன.

ஹிரண்யன் ராஜ சிம்மத்தின் அருகே போனான். ‘‘நீ என்ன மாயாவியா? ஜாலவித்தை காட்டுகிறாயா? உன் வித்தையை என் மகனிடம் வைத்துக் கொள்’’ என்று தன் கதையால் தொடர்ச்சியாய் தாக்கினான். சிம்மம் சிலிர்த்துத் திரும்பியது. ஹிரண்யனை அள்ளி எடுத்தார். அவன் நெஞ்சைக் கிழித்தார். அவன் குடலை மாலையாக்கி, தன் கழுத்தில் தொங்க விட்டார். குளுமையான தோத்திரங்களால் அவரை குளிர்வித்தான் பிரகலாதன். அவரும் மெல்ல உருகினார். ஜாபாலி மஹரிஷி நாதழுதழுக்க உச்சியைப் பார்க்க நரசிம்மர் உக்கிரராய், நெடுமாலாய் அவரெதிரே தோன்றினார்.

மஹரிஷி அவர் பாதத்தில் நெடுமரமாய் வீழ்ந்து பரவினார். அவர் திருவடியை தம் சிரசில் தாங்கினார். நிரந்தரமாய் அவரோடு கலந்தார். அவர் தரிசித்த நரசிம்மரை நாமும் உள்ளம் சிலிர்க்க தரிசிக்கிறோம். இத்தலம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது. இத்தலம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் நடுவே உள்ளது.

The post எங்கும் நிறைந்த சிங்கப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Singha ,Perumal ,Sinhaperumal Temple ,Narasimha ,Singha Perumal ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...