×

தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி தீவிரம் குட்டி யானை ரகு உட்பட 5 யானைகள் பங்கேற்பு

ஊட்டி : காட்டு யானைகளை விரட்டவும், ரோந்து பணிகளில் ஈடுபடுத்திடும் வகையிலும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 5 இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், குட்டி யானை ரகு உட்பட 5 யானைகள் பங்கேற்றுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்த யானை குட்டிகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் யானைகள் பிடித்து வரப்பட்டு இங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகள் உட்பட மொத்தம் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவற்றில் வயது முதிர்ந்த 6 யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட மூத்த யானைகள் கும்கிகளாக உள்ளன.

இவை வனப்பகுதிகளுக்குள் ரோந்து பணிகள், குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இம்முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு கும்கியாக மாற்றும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போதுள்ள கும்கி யானைகளுக்கு வயதாகி விட்டன. ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ள நிலையில், முகாமில் உள்ள இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது, முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் இளம் வளர்ப்பு யானைகளான உதயன் (மக்னா), கிருஷ்ணா, சேரம்பாடி சங்கர், சென்னை வண்டலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரி, கிருஷ்ணா மற்றும் தேன்கனிகோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்டு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானை ரகு ஆகிய யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில், குட்டி யானை ரகு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் யானைகளுக்கு கயிறு இழுத்தல், முன்னங்கால்களை உயர்த்தி இரு கால்களில் நிற்பது போன்ற பயிற்சிகளும், காட்டு யானைகளை விரட்டும் போது எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிகள் ெதாடர்ந்து அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் கூறுகையில்,“தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போதுள்ள கும்கி யானைகள் சில முதுமையடைந்து ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளன. இதனால், முகாமில் உள்ள இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு 5 யானைகள் தேர்வு செய்யப்பட்டு அவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

The post தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி தீவிரம் குட்டி யானை ரகு உட்பட 5 யானைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kumki ,Theppakkad camp ,Raghu ,Theppakadu ,
× RELATED தெய்வச்செயல்