×

நினைத்ததை நிறைவேற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. ஆனால், மூவுலகை ஆளும் ஈசன் அருள்தரும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. பஞ்ச பூத தலங்கள் ஐந்து. முக்தி தரும் தலங்கள் நான்கு. அண்ணாமலையார் திருக்கோயில் நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகும்.

தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலை திருக்கோயிலில், எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்ந்த பெருமைக்குரியது. திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட செருக்கை நீக்கி, அடி முடி காணாத அக்னி பிழம்பாக காட்சியளித்தும், ஊடலும், கூடலும் இறைவனுக்கும் இயற்கை என உமையாளுக்கு உணர்த்தி திருவூடல் புரிந்ததும், உமையாளுக்கு இடபாகம் அருளி அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்ததும் இங்குதான்.

கயிலையின் மீது குடியிருக்கும் ஈசன், கயிலாய வடிவாகவே காட்சிதரும் தனிப்பெருமை பெற்றது திருவண்ணாமலை. எனவேதான், சுயம்பு திருமேனியாக எழுந்தருளியுள்ள அண்ணாமலையை லட்சோப லட்சம் பக்தர்கள் வலம் வந்து பவுர்ணமி நாட்களில் வழிபடுகின்றனர்.

இத்திருக்கோயிலை தரிசிப்போரின் உள்ளம் உருகும். விழிகளில் நீர்பெருகும். உயிரும், மெய்யும் உணர்வற்ற பரவசத்தில் நிலைக்கும். அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள் நுழைந்தாலே போதும். நம் உள்ளத்து சஞ்சலங்கள் நிர்மூலமாகும்.

‘ஓம் நமசிவாய’ எனும் ஐந்தெழுந்து மந்திரம் மட்டுமே போதும் இப்பிறவியின் பெரும்பயன் அடைவதற்கு. இந்நிலையில், அடியாரின் உள்ளம் நிறைந்த அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், ’சித்ரா பவுர்ணமி’ விழா தனிச் சிறப்புக்குரியது. சித்திரை மாதத்து பவுர்ணமி என்பதாலும், சித்திர குப்தன் அவதரித்த திருநாள் என்பதாலும் சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுவதாக இருவேறு ஆன்மிக பின்னணிகள் சொல்லப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி உருவான ஆன்மிக பின்னணி சுவையானது! ஒருசமயம் இறைவனுடன் திருவிளையாடல் கொண்டிருந்த பார்வதி தேவி, தனது கைவண்ணத்தால் மிகச்சிறந்த கலைவண்ணம் தீட்டினார். அன்னையின் விரல்களில் தவழ்ந்த தூரிகையில் இருந்து, ஒரு அழகிய மழலையின் சித்திரம் உருவானது. அவை சித்திரம் போல இல்லாமல், அச்சு அசலான ஒரு குழந்தையாகவே காட்சியளித்தது.

சித்திரத்தை வியந்து பார்த்த சிவபெருமான், அதற்கு உயிர் கொடுக்க விரும்பினார். அந்த சி்த்திரத்தின் (ஓவியம்) மீது தனது மூச்சுக்காற்றை படரவிட்டார். சித்திரம் உயிர்பெற்று குழந்தையாய் தவழ்ந்தது. பார்வதி தேவியார் உள்ளம் மகிழ்ந்தார். சித்திரத்தால் உருவானதால், அந்த குழந்தையை சித்திரகுப்தன் என்றழைத்தார். சித்திரத்தில் உருவான குழந்தைதான், எமதர்மனின் வேண்டுகோளை ஏற்று, மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமனம் செய்யப்பெற்றார்.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில், பவுர்ணமி இணைந்த நாளில் அன்னை பார்வதிதேவியின் சித்திரத்தில் இருந்து உருவானதால், சித்ரா பவுர்ணமி விழாவன்று சித்திர குப்தனுக்கு தனி வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும், சூரியனுக்கும், அரது காதல் மனைவியான வானவில்லில் இருந்து உருவான நீளாதேவிக்கும், சித்ரா பவுர்ணமியன்று பிறந்தவர் சித்ரகுப்தர். சூரிய பகவானிடம் கலைகளை கற்று, அனைத்திலும் தேர்ச்சியுற்ற சித்ரகுப்தரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், எமதர்ம ராஜாவுக்கு உதவியாக சித்ர குப்தரை நியமித்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் அம்மன் சன்னதி எதிரில் நவகிரகங்களுக்கு அடுத்து அமைந்துள்ள சித்திர குப்தன் சன்னதியில், சித்ரா பவுர்ணமியான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றாலும், சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்வோரின் எண்ணங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி இரவில், அதிக ஒளியுடன் சந்திரன் பிரகாசிக்கும். எனவே, சித்ரா பவுர்ணமி ஒளியில் கிரிவலம் சென்றால், ஆண்டு முழுவதும் கிரிவலம் சென்ற பலனை அடையலாம் என்கின்றனர். சுயம்பு வடிவான மலை உருவில் எழுந்தருளிய மகேசனை, சித்தர்களும், ரிஷிகளும் அருவமாக பவுர்ணமியில் வலம் வருகின்றனர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இன்று 11.58 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று இரவு உகந்த நேரம் தொடங்கினாலும், இன்று இரவுதான் சித்ரா புவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் ெதரிவித்துள்ளது. அதையொட்டி, பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது திருவண்ணாமலை.

The post நினைத்ததை நிறைவேற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Chitra ,Grivalam ,Mukti ,Thiruvarur ,Chidambaram ,Mukhti ,Ghasi ,Easan Aruldha ,Thiruvannamalayam ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?