×

நெல்லை கலெக்டர் படகில் சென்று ஆய்வு கூத்தன்குழி கடலுக்குள் கூண்டில் வளரும் மீன்கள்

*திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கடலுக்குள் கூண்டுகள் அமைத்து அதில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூத்தன்குழி கடலுக்குள் சோதனை முறையில் நடைபெறும் இத்திட்டத்தை கலெக்டர் படகில் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இணையாக சில கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழில் சிறப்பு பெற்று விளங்குகிறது. தமிழக கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் செல்கின்றன. இதன் மூலம் பல லட்சம் மீனவ குடும்பத்தினர் வாழ்வு பெறுகின்றனர்.

நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராம மக்கள் பாரம்பரிய முறையில் நாட்டுப் படகில் மீன்கள் பிடித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகமோ, மீன்பிடி தங்குதளமோ இல்லாததினால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடலுக்குள் கூண்டு வைத்து மீன்களை வளர்க்கும் திட்டத்தை நெல்லை மாவட்டம் கூத்தங்குழி கடலில் மீன்வளத்துறை மூலம் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. கூத்தன்குழி கடற்கரை கிராமத்தில் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கும் முறையை மீனவர்களிடையே மீன்வளத்துறை அறிமுகப்படுத்தியது. இதற்காக கூத்தங்குழி மீனவ கிராமத்தில் தலா 15 உறுப்பினர்கள் கொண்ட 2 மீனவ குழுக்கள் அமைக்கப்பட்டன.

மீனவர்களை உறுப்பினராக கொண்ட சுய உதவிக் குழுக்கள் மூலம் கடலுக்குள் 7 மீட்டர் விட்டமும் 7 மீட்டர் ஆழமும் கொண்ட கூண்டுகள் அமைக்கப்பட்டு ஒரு கூண்டிற்கு ஆயிரம் கொடுவாய் மீன் குஞ்சுகள் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி விடப்பட்டன. குழுவைச் சார்ந்த மீனவர்கள் தினமும் கடலுக்குள் சுழற்சி முறையில் சென்று கூண்டில் உள்ள மீன்களுக்கு உணவும் அளித்து வருகின்றனர். 6 மாத காலத்தில் இந்த மீன்கள் முழு வளர்ச்சி பெறும். அதன் பின் மீனவர்கள் இதனை பிடித்து விற்பனை செய்ய உள்ளனர்.

இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று நாட்டுப் படகில் கடலுக்குள் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை பார்த்து அதனை ஆய்வு செய்தார்.

மேலும் மீனவர்கள் எவ்வாறு மீனுக்கு உணவளிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலத்தில் மீன் குஞ்சுகளின் வளர்ச்சியை பார்வையிட்டார். பரிட்சார்த்த முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த மீன் குஞ்சுகளின் வளர்ச்சியை பொறுத்து, மேலும் பல மீனவர்களின் குழுக்களுக்கு இதுபோல் கடலுக்குள் கூண்டு வைத்து மீன் வளர்க்கும் முறையை விரிவுபடுத்த இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நெல்லை கலெக்டர் படகில் சென்று ஆய்வு கூத்தன்குழி கடலுக்குள் கூண்டில் வளரும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Naddy district ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!