×

சலூனில் நூலகம் அமைத்து வாசிப்பு பழக்கம் ஊக்குவிப்பு மன் கி பாத் மூலம் மோடி பேசிய தூத்துக்குடி இளைஞருக்கு நினைவு பரிசு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வருவதன் மூலம் பிரதமரை தன்னிடம் பேசவைத்தவர் தூத்துக்குடி இளைஞர் பொன் மாரியப்பனுக்கு 100வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பொன்.மாரியப்பன். மில்லர்புரத்தில் முடி திருத்தகம் நடத்தி வருகிறார்.

வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் நாளிதழுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை காண முடியும். அதோடு கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல் என சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது. 8-ஆம் வகுப்பு வரைதான் படித்திருந்தாலும் சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு. முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 500க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது.

இந்த சலூன் நூலகத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். தூத்துக்குடி எம்பி கனிமொழி எம்.பி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் கலைஞர் எழுதிய புத்தகம் உள்ளிட்ட 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியுள்ளார். இது மேலும் அவருக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் அவரை அழைத்து ‘வணக்கம். நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரித்திருக்கிறார்.

மேலும் அவருடனான உரையாடலில் ‘உங்களுக்கு எந்த புத்தகம் மிகவும் பிடிக்கும். என்ற பிரதமரின் கேள்விக்கு, பொன் மாரியப்பன் ‘திருக்குறள்.!’ என பதிலளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மன் கி பாத் 100வது நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பொன்.மாரியப்பன் குறித்து அறிந்த கவர்னர் ரவியின் அழைப்பின் பேரில் ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை பாராட்டி கவர்னர் நினைவு பரிசு வழங்கியுள்ளார்.

இது போன்று பலர் பாராட்டுவது தனக்கு ஒரு ஊக்கத்தை தந்து வருவதாகவும் இதன் மூலம் சலூன் நூலகத்தை பெரிய அளவில் மாற்ற உதவியாக இருக்கும் என பொன் மாரியப்பன் தெரிவித்தார்.

The post சலூனில் நூலகம் அமைத்து வாசிப்பு பழக்கம் ஊக்குவிப்பு மன் கி பாத் மூலம் மோடி பேசிய தூத்துக்குடி இளைஞருக்கு நினைவு பரிசு appeared first on Dinakaran.

Tags : Modi ,Mann Ki Bath ,Saloon ,Thoothukudi ,Saloon Store ,Thoothukudi Youth ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...