×

திருஉத்தரகோசமங்கை,திருப்புல்லாணியில் சித்திரை திருவிழா தேரோட்டம்

 

சாயல்குடி, மே 5: திருஉத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணியில் நேற்று தேரோட்டம் விமர்சியாக நடந்தது. திருப்புல்லாணியில் உள்ள பத்மாஸினித் தாயார் உடனுரை ஆதிஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களான திவ்ய தேசங்களில் 44வது திருத்தலமாக விளங்குகிறது. தசாவதாரங்களில் ஒன்றான ராமர் அவதாரத்திற்கு பெருமாள் அருள் புரிந்த, ராமாயண காலத்திற்கு முந்தையதாகவும், ராமாயணத்தில் தொடர்புடைய கோயிலாக விளங்குகிறது. இங்கு தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமர் கோயில் உள்ளது. ராமருக்கு சித்திரை திருவிழா தனியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கடந்த ஏப்.26ம் தேதி கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றப்பட்டது.

கடந்த 10 நாட்களாக அனுமன், கருடர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் நான்கு ரதவீதிகளில் ஊர்வலம் நடந்தது. மே 1ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலையில் ராமர், சீதா,லட்சுமணன், அனுமன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்தனர். பக்தர்கள் கோவிந்தா, ராம்,ராம் கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விவசாயம் செழிக்க வேண்டிய வடம் பிடித்தவர்கள் மீது கத்தரி, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வீசப்பட்டது. இதுபோன்று திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற சிவன் தலமான மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.25ம் தேதி துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. தேரில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மங்களேஸ்வரி, மங்களநாதர் உற்சவ மூர்த்திகள் கைலாய இசை வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். வீதி உலாவின் போது பொதுமக்கள் தேங்காய், பழம் படைத்து வரவேற்று வழிப்பட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தனர்.

The post திருஉத்தரகோசமங்கை,திருப்புல்லாணியில் சித்திரை திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Thirutharagosamanga ,Thiruppullany ,Sayalkudi ,Tiruppullani ,Padmazini ,Tiruppullany ,Thirutharagosamanga, ,Thiruppullanyi Siritra festival ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...