×

முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது:: துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்: ₹15 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை, மே 5: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியை ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், ₹15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி 12ம் தேதி அதிகாலை நான்கு ஏடிஎம் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து அதில் இருந்த ₹72.79 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இரண்டரை மணி நேரத்துக்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்து முடிந்தது.

இது தொடர்பாக, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், டிஐஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்புத் துலக்கும் பணி தீவிரமாக நடந்தது. கொள்ளை சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் ஹரியானா மாநிலத்துக்கு தப்பிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருந்தவர்களை அடுத்தடுத்த கைது செய்தனர். அதன்படி, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ₹5 லட்சம், மூன்று கார்கள், ஒரு கன்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்டவர்களில், முக்கிய குற்றவாளிகளான இரண்டு பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நபர், ஹரியானாவில் பதுங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. எனவே, ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து தனிப்படையினர் முகாமிட்டு தேடினர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம், நூ மேவாத் மாட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான ஜாகீர்உசேன் மகன் ஆசீப் ஜாவேத்(30) என்பவரை துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து ₹15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளி ஆசீப் ஜாவேத்தை, பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், வேன் மூலம் நேற்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையடித்த தொகை எப்படி ஹரியானாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. எங்கு யார்? யாரிடம் கைமாறியது என்ற தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆசீப் ஜாவேத்தை, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹரியானாவில் மேலும் சிலரை தனிப்படையினர் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளைபோன தொகை முழுவதும் சிக்கும் என தெரிகிறது.

The post முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது:: துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்: ₹15 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Haryana ,Thiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...