×

தொடரும் கோடை மழையால் சுத்தமல்லி தடுப்பணையில் நீர் வரத்து அதிகரிப்பு மே மாதத்தில் மனதுக்கு இதமான சூழல்

நெல்லை, மே 5: நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கோடை மழையால் சுத்தமல்லி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு மே மாதத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள மனதுக்கு இதமான சூழலை அனுபவிக்க மக்கள் அங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே போதிய மழை இல்லாமல் இருந்தது. குறிப்பாக கடந்த வடகிழக்குப் பருவமழை இயல்பு அளவிற்கு பெய்யவில்லை. ஆயினும் தொடர்ந்து மழையை எதிர்பார்த்து கடந்த நெல்சாகுபடிக்கு அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் அணைகளில் நீர் மட்டம் கடந்தவாரம் கவலைதரும் நிலைக்கு சரிந்தது. கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டமும் சரிந்து சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது உறைகிணறு பகுதிகளில் நீர் தடையின்றி செல்வதில் சிக்கல் தலை தூக்கியது. மே மாதம் நிலைமை மேலும் மோசமாகுமோ என அனைவரும் அச்சப்பட்ட நிலையில் ஏப்ரல் இறுதிநாட்களில் இருந்து தொடர்ந்து கோடை மழை கணிசமாகப் பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 9 நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக வெயில் தாக்கம் வெகுவாக குறைந்ததுடன் பூமி குளிர்ந்தது. குறிப்பாக கடந்த மே 1 மற்றும் 2 ஆகிய. தேதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் பாளை வட்டாரத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இதனால் காய்ந்த கிடந்த வயல்களில் நீர் நிரம்பி காணப்படுகின்றன.

வறண்ட குளங்களுக்கும் மழை நீ பெருகத் தொடங்கியுள்ளது. பாளையங்கால்வாயிலும் கோடையில் நீர்ஓட்டம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து சற்று உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை சுத்தமல்லி அணைப்பகுதிக்கு நேற்று நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் மதகுகளில் இருந்து தண்ணீர் ஆற்றிற்கு கூடுதலாக திறந்து விடப்பட்டது. அதில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்தது. அணைப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது தெரியவந்ததும் சுத்தமல்லி மற்றும் அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு படையெடுத்து சென்று நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த வண்ணம் உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லை சுத்தமல்லி அணைப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது தெரியவந்ததும் இங்கு படையெடுத்து வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த பொதுமக்கள் இதுபற்றி கூறுகையில் ‘‘பொதுவாக கோடை காலத்தில் இங்கு தண்ணீர் வரத்து மிக குறைவாக இருக்கும். அதுவும் மே மாதம் வறண்ட நிலையில் இருக்கும் தற்போது மே மாதம் எதிர்பாராத வகையில் அதிகளவில் தண்ணீர் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

The post தொடரும் கோடை மழையால் சுத்தமல்லி தடுப்பணையில் நீர் வரத்து அதிகரிப்பு மே மாதத்தில் மனதுக்கு இதமான சூழல் appeared first on Dinakaran.

Tags : Suttamalli barrage ,Nellai ,Nellai district ,Sudtamalli barrage ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...