×

திராவிட மாடல் குறித்து விமர்சனம் ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும்: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: திராவிட மாடல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார். திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் கூறி பாஜ தலைவராகவே மாறி இருக்கிறார். அரசியல் சாசன பதவியில் இருக்கும் கவர்னர் தொடர்ந்து வரம்பு மீறிக் கொண்டிருக்கிறார். அனைவரும் ஓரணியில் திரண்டு கவர்னரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): திராவிட மாடல்- வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி ராகம் பாடுவது அவரது இந்துத்துவ ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியை விட்டு வெளியேறிப் பேசட்டும். திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தன்னை மீண்டும் ஒரு ஆர்எஸ்எஸ், பாஜவை சேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துக் கொண்டு அப்படி இல்லை என்று பொய் சொல்கிறார். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது என்று அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார்.

இப்படி ஒரு பேட்டியை அளித்ததன் மூலம் ஒரு கவர்னர் என்ற முறையில் தன் அரசியல் அமைப்புக் கடமையிலிருந்து தவறிவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். செல்வப்பெருந்தகை (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்): தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு மக்களுக்கு, தமிழ்நாட்டின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு மக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தி, சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கி அதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தை ஒன்றிய அரசும், கவர்னரும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை உடனடியாக குடியரசு தலைவர் திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post திராவிட மாடல் குறித்து விமர்சனம் ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும்: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Chennai ,R.R. N.N. Ravi ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...