×

ஆவின் இ-பால் அட்டை அறிமுகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023-24ம் நிதியாண்டிற்காக கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மானிய கோரிக்கையின் போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆவின் நுகர்வோர்களுக்கு மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு பால் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. தற்போதுள்ள நடைமுறைபடி, ஆவின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அட்டை புதுபித்தல் மற்றும் புதுஅட்டை வாங்க வேண்டி இருந்தது. இதனால் ஏற்படும் நேரத்தையும், அட்டைகள் வாங்குவதை எளிதாக்கவும் 10 லட்சம் பேருக்கு இ-பால் அட்டை வழங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நுகர்வோர்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே மாதாந்திர பால் அட்டைகளை மின்னணு முறையில் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பால் அட்டை அச்சடித்தல், விநியோகித்தல் போன்ற செலவினங்கள் குறைக்கப்படுவதோடு நுகர்வோர்களின் பயணம் மற்றும் நேரம் குறையும். மேலும் ஆவின் பால் அட்டையை பெறுவதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு தேவையான பாலுக்கு முன் பணத்தையும் செலுத்த வேண்டும். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது: பால் அட்டை வாங்குவதற்கும், புதுப்பிக்கவும் நேர விரயம் ஆகும். இதனை கருத்தில் கொண்டு இ-அட்டை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களுக்கு ஆரஞ்சு பால் ஒரு லிட்டர் ரூ.46க்கு கிடைக்கும். வெளிச்சந்தையில், வியாபார நோக்கத்தோடு விற்கப்படும் பால் மட்டுமே ரூ.60க்கு விற்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ரூ. 70 முதல் ரூ.72க்கு விற்கப்படுகிறது அதிலிருந்தும் ரூ.10 குறைத்தே விற்கப்படுகிறது. இந்த இ-அட்டை மூலம் தவறுகள் நடப்பது தவிர்க்கப்படும். மேலும் இதில் நேரடியாக விநியோகம் செய்வர் மற்றும் நுகர்வோருக்கு தொடர்பு இருக்கும். நாளொன்றுக்கு 60 லட்சம் பாக்கெட் தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கொடுக்கப்படுகிறது. மேலும் ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்கப்படுவது என்பது முதல்வரை கலந்தாலோசித்த பிறகு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

* தினமும் 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்.

* புதிதாக இ பால் அட்டை அறிமுகம்.

* ஆதார் கார்டு, ரேஷன் கார்டு கொடுத்து வாங்கலாம்.

* 10 லட்சம் பேருக்கு இ-பால் அட்டை வழங்க திட்டம்.

* ஆரஞ்சு பால் பாக்கெட்டை இ பால் அட்டை மூலமாக வாங்கினால் அரை லிட்டருக்கு ரூ. 6 வரை சேமிக்கப்படும்.

* வீட்டிற்கே பால் சப்ளை செய்யப்படும்.

The post ஆவின் இ-பால் அட்டை அறிமுகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Awin ,Minister ,Nassar ,Chennai ,Tamil Nadu ,Disheries ,Minister of State ,Livestock Care ,Sa. b.k. Nassar ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...