×

திருத்தணி நல்லதண்ணீர் குளத்தில் மழை நீர் சேகரிக்க நீர் வரத்து கால்வாய்: நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

திருத்தணி: திருத்தணி நல்லதண்ணீர் குளத்தில் மழை நீர் சேகரிக்க நீர்வரத்து கால்வாய் அமைத்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருத்தணி காந்தி ரோடு திரௌபதி அம்மன் ஆலயம் அருகில் உள்ளது நல்ல தண்ணீர் குளம். நகராட்சிக்கு சொந்தமான இந்தக் குளம் முந்தைய காலத்தில் இந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்ததால் இது நல்ல தண்ணீர் குளம் என அழைக்கப்படுகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கால்நடைகள் தாகம் தணிக்கவும் இது பயன்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குளத்தின் அருகாமையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூலம் மழைக்காலங்களில் சாலைகளில் செல்லும் தண்ணீர் கழிவுநீரோடு கலந்து இந்த குளத்துக்கு செல்வததால் குளம் நிரம்பி எப்போதும் வற்றாமல் இருந்தது. ஆனாலும் இந்தக் கழிவுநீர் கலப்பதால் குளம் மாசு படிந்து புதர்கள் மண்டி இருந்ததால் கடந்த ஆட்சியில் இந்த குளத்தை தூர்வாரி சுற்றிலும் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்தனர். அப்போது வழக்கமாக கழிவு நீர் கால்வாயில் இருந்து குளத்துக்கு செல்லும் அந்த சிறிய கால்வாயை அடைத்து விட்டார்கள். இதனால் குளத்துக்கு நீர்வரத்து இல்லாமல் தற்போது குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. மேலும் காந்தி ரோடு பகுதியில் இருந்து குளத்தை ஒட்டி இருந்த கழிவுநீர் கால்வாய் சாக்கடை நீரால் இங்கு வசிக்கும் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

அரை நூற்றாண்டு காலமாக இந்த பகுதியில் மக்கள் எதிர்பார்த்த இந்த கழிவுநீர் கால்வாய் நகராட்சித் தலைவர் சரஸ்வதி பூபதியின் தீவிர முயற்சியில் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது இந்த சாக்கடை நீர் நந்தி ஆற்றில் சென்று கலக்கிறது. தற்போது சீரமைத்து கட்டிமுடிக்கப்பட்ட இந்த கால்வாய் மூலம் மழைக்காலங்களில் வருகிற நீரை திருப்பிவிட்டு, குளம் நிரம்ப வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி ஆணையர் ராம ஜெயம், நகராட்சி பொறியாளர் கோபு, நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ், நகராட்சி உதவியாளர் ஜெகநாதன் ஆகியோர் நேரடியாக வந்து பார்வையிட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் தொடங்க உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் மீண்டும் நீர் வரத்துக்காக பைப்புகள் அமைத்து, மழைக்காலங்களில் மட்டும் சுத்தமான நீர் இதில் செல்கிற வகையிலும், கழிவுநீர் இதில் கலக்காமல் இருப்பதற்கு லாக்கர் கதவுகள் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு மழைநீர் சேகரிப்பு திட்டம் என்று கூட சொல்லலாம். ஏற்கனவே மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல், நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதேபோல் கழிவுநீர் அல்லாத சுத்தமான மழைக்காலங்களில் இந்த நீர் வரத்து கால்வாய் மூலம் இந்த நல்ல தண்ணீர் குளம் நிரம்பி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்து, முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் என பொதுமக்கள் நகராட்சிக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

The post திருத்தணி நல்லதண்ணீர் குளத்தில் மழை நீர் சேகரிக்க நீர் வரத்து கால்வாய்: நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruthani Good ,Water ,Pond ,Thiruthani ,Tiruthani good ,Tiritani Gandhi ,Dinakaran ,
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்