×

கொல்கத்தா அணி வெற்றி

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 தொடரின் லீக் போட்டியில் 47வது ஆட்டம் நேற்று இரவு ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா அணி டாஸில் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், குர்பாஷ் ஆகியோர் களம் இறங்கினர். குர்பாஷ் ரன் ஏதும் எடுக்காமல் எம். ஜான்சன் பந்துவீச்சில் புரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் ஜேசன் ராயுடன் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ஜேசன் உடன் நிதிஷ் ரானா இணைந்தார். தியாகி பந்து வீச்சில் 20 ரன்னில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் அவுட் ஆனார்.

பிறகு ஜோடி சேர்ந்த ரானாவும், ரிங்குசிங்கும் இணைந்து 61 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ரானா 42 ரன்களில் (31 பந்துகள்) அவுட் ஆனார். தொடர்ந்து ரிங்கு சிங்கும், ரசலும் விளையாடினர். ரசல் 24 ரன்கள் (15 பந்துகள்) எடுத்த நிலையில் மார்கண்டே வீசிய பந்தில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த நரைன் 1 ரன்னில் அவுட் ஆனார். நடராஜன் பந்தில் ஷர்துல் தாகூர் 8 ரன்னில் அவுட் ஆனார். ரிங்குசிங் 46 ரன்னில் (35 பந்துகள்) சமத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு வந்த ஹர்சித் ரானா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமறிங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மேக்கர் அகர்வால் 18 ரன்களுக்கு ஹர்சித் ரானா பந்துவீச்சிலும், அபிஷேக் ஷர்மா 9 ரன்களுக்கு ஷர்துல் தாகூர் பந்து வீச்சிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராகுல் திருப்பதி 20 ரன்கள், ஐடன் 41 ரன்கள், ஹென்ரிச் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹாரி புரூக் ரன் எதுவும் எடுக்காமலும், மார்கோ ஜேசன் 1 ரன்னில் அரோரா பந்து வீச்சிலும் அவுட் ஆனார்கள். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post கொல்கத்தா அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Hyderabad ,Kolkata Nighriders ,IPL League ,Sunrisers Hyderabad ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்