×
Saravana Stores

விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: ராபி மற்றும் நவரை பருவத்தில் அறுவடை முடிந்து உள்ள நிலையில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உழவு என்பது கருவிகள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு விதை முளைத்தலுக்கும், நாற்று மற்றும் பயிர் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மண்ணை பக்குவப்படுத்தி தயார் செய்வதாகும். சாதாரணமாக நாம் பயிரிடும் போது, மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை அப்படியே கையாண்டு அல்லது சிறுசிறு மாறுதல்கள் செய்து பூச்சிகளையும் நோய்களையும் உழவியல் முறை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

கோடை மழை பெய்யும் பொழுது உழவர்கள் அனைவரும் தங்கள் நிலங்களில் மழை நீரை சிறிதும் வீணாக்காமல் கோடை உழவினை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் மானாவாரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை புழுதிபட உழுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால், மண்ணில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாற்றப்படுகிறது.

மேலும், களைக்கொல்லி மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளின் வீரியம் வெகுவாக குறைந்து மண்ணின் விஷத்தன்மை குறைகிறது. கோடை உழவினால் மண் நன்றாக நயமாகிறது. இதனால் நீர் ஊடுருவிச் செல்லும் தன்மை அதிகரிக்கிறது. நீர் வேர்மண்டலம் வரை சென்று பயிருக்கு நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது.

நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழ வேண்டும். இப்படி உழுவதால் மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ. ஆழத்திற்கு செல்லும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்க ஏதுவாகிறது. நிலச்சரிவு 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை உள்ள நிலங்களில் ஆழச்சால் அகலப்பாத்தி அமைக்க வேண்டும். ஆழச்சால் அகலப்பாத்தி 4 அடி அகல பாத்திகளாகவும், ஒரு அடி அகலம் உள்ள 15 செ.மீ ஆழம் உள்ள சால்களாகவும் அமைப்பது மிகவும் நல்லது.

இதனால் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பதோடு நீர் ஓட்டத்தை தடுத்து சத்துள்ள மண் வீணாவதையும் தடுக்கலாம். மழை நீர் சால்களில் தேங்கி நின்று மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடைகிறது. பயிர் அறுவடை செய்த பின்னர், பயிரின் தாள்கள் நிலத்தில் தேங்கி விடுகிறது. இது பெரும்பாலான பூச்சிகளுக்கு உணவாகவும், நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்கிறது. அதனால் கோடை உழவு செய்தால், களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகிறது.

களைகளின் விதைகள், கோடை உழவின் போது மண்ணுக்கு மேலே வந்து சூரிய வெப்பத்தால் அழிந்து விடுகிறது. இதனால் களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கப்படுகிறது. பூச்சிகளின் முட்டைகளும், கூண்டுப்புழுக்களும் அழிக்கப்படுகின்றன. உழவு செய்யும் போது பறவைகள் அதிகமாக வந்து உழவின் போது வெளியே வரும் புழு மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளுகின்றன.

இதனால் பூச்சிகளின் தாக்கம் குறைகிறது. தாவர கழிவுகளின் மட்கும் தன்மை அதிகரித்து மண் வளம் பெருகிறது. மழை நீர் சிறிதும் வீணாகாமல், பயிருக்கு கிடைக்க ஏதுவாகிறது. இதனால் மழை நீர் சேகரிப்புத் திறன் அதிகரிக்கிறது. மேலும், விவசாயிகள் தொழில் நுட்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Rabi ,Navar ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...