×

குன்றத்தூரில் பரபரப்பு; கறிக்கடைக்காரரை வெட்டிய மர்ம கும்பல்: பழிக்குப்பழி வாங்க நடந்த சம்பவமா என போலீசார் விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூர், மேத்தாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மகுரு (38). இவர் குன்றத்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகே வசித்து வந்த நபர் ஒருவரின் மனைவியுடன் பத்மகுருவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பத்மகுருவின் மனைவி அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, தனது கணவருடன் உள்ள தகாத உறவை விட்டு விடுமாறு திட்டி தீர்த்து விட்டு தனது வீட்டிற்கு வந்து விட்டார். பதிலுக்கு ஆத்திரமடைந்த அப்பெண், தனது கணவர் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு பத்மகுருவின் வீட்டிற்குச் சென்றார்.

இதில், பத்மகுரு தரப்பிற்கும், எதிர்தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், பத்மகுரு கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து எதிர்தரப்பைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான குமரன் என்பவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். அந்த கொலை நடந்த சில மாதங்களில், மேத்தாநகர் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பத்மகுருவின் மனைவியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த பத்மகுருவின் மனைவி சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே நடந்த கொலை வழக்கில், சிறையில் இருந்து சமீபத்தில் பத்மகுரு ஜாமீனில் வெளியே வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு தனது கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பத்மகுருவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பத்மகுரு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக பத்மகுரு வெட்டப்பட்டாரா அல்லது வேறு எதுவும் முன்பகை காரணமா என்ற கோணத்தில் விசாரித்து, தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post குன்றத்தூரில் பரபரப்பு; கறிக்கடைக்காரரை வெட்டிய மர்ம கும்பல்: பழிக்குப்பழி வாங்க நடந்த சம்பவமா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kunradur ,Kunrathur ,Padmaguru ,Kunrathur, Mehtanagar ,Kunradthur Murugan Temple ,Kunradthur ,
× RELATED 23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு