×

பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து இன்று முதல் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற 434 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 2 லட்சம் இடங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில் 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் மாணவர்கள் தான் மேற்கண்ட அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றனர். மீதம் உள்ள இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை வழக்கம் போல ஜூலை மாதம் தொடங்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அமைத்துள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பின் செயலாளர் நேற்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் 8ம் தேதி காலை வெளியாக உள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேற்கண்ட படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ மாணவியர் http://www.tneaonline.org, அல்லது http://tndte.gov.in என்ற இணைய தளங்கள் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய தளம் மூலம் இன்று தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ இணைய தளம் மூலம் செலுத்தலாம். இதன் மூலம் செலுத்த இயலாதவர்கள் ”The Secretary TNEA” payable at chennai என்ற பெயரில் இன்று மு தல் பெற்ற டிடியை பதிவுக் கட்டணமாக சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். இதன்படி ஓசி, பிசி, பிசிஎம்,எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். பொறியியல் சேர்க்கை கவுன்சலிங் விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்கண்ட இணைய தளத்தில் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் போது அசல் சான்றுகளை சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதில் பிரச்னைகள் தவறு இருந்து கண்டறியப்பட்டால் அவர்கள் செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதையொட்டி அவர்கள் சேவை மையங்கள் மூலம் அவற்றை சரி செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிஇ, பிடெக் பிற்சேர்க்கை மற்றும் பகுதி நேர படிப்பகளுக்கான சேர்க்கை குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் 044-223510114, 22351015ல் தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த சுமார் 40 ஆயிரம் மாணவ மாணவியர் நீட் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 8ம் தேதி காலை வெளியாக உள்ளது. இந்நிலையில்தான் பிஇ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து விரைவில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் மாணவர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,B.Tech ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...