×

இரு சமூகத்தினர் பேரணியால் வெடித்தது பயங்கர வன்முறை மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு: இணையதள சேவைகள் துண்டிப்பு, 8 மாவட்டங்களில் 144 தடை


இம்பால்: மணிப்பூரில் இருசமூகத்தினர் நடத்திய பேரணியால் பயங்கர வன்முறை வெடித்தது. கலவரக்காரர்களை கண்டதும் சுட கவர்னர் இல.கணேசன் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் பழங்குடியல்லாத மெய்டீஸ் சமூகத்தினர் 53% பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும்படி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு 40% வசிக்கும் பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினரின் கோரிக்கையை 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மெய்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து தர எதிர்ப்பு தெரிவித்து நாகா, குகி உள்ளிட்ட மணிப்பூரின் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணி வகுப்பு‘ நடத்தப்பட்டது. மாநிலத்திலுள்ள 8 மலை மாவட்டங்களில் நடந்த பழங்குடியின ஒற்றுமை அணிவகுப்புக்கு எதிராக மெய்டீஸ் சமூகத்தினரும் பேரணி நடத்தினர். சவுசந்திரபூர் மாவட்டத்தில் பேரணி சென்ற இருபிரிவினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் பரவி வன்முறை வெடித்தது. மலை மாவட்டங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மணிப்பூர் மியான்மர் எல்லையோர கிராமமான மோரா கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

வன்முறையிலும் மற்றும் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவமும், அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை பரவுவதை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர், காங்போக்பி, தெங்னவுபால் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறை பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வௌியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சுராசந்த்பூரில் இருந்து 5,000 பேரும், இம்பால் பள்ளத்தாக்கில் இருந்து 2,000 பேரும், தெங்னவுபால் மாவட்டத்தில் இருந்து 2,000 பேர் என இதுவரை மொத்தம் 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தநிலையில், மணிப்பூரில் வன்முறையை தூண்டும் வகையில் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடுவோரை கையாள அதி விரைவுப் படையை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. இந்த படையினர் நேற்று மாலை இம்பால் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

* அமித்ஷா அவசர ஆலோசனை பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் சிஆர்பிஎப் இயக்குனர் குல்தீப் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்ற அவர் நேற்று உடனடியாக மணிப்பூர் சென்றடைந்தார். இதற்கிடையே மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் பக்கத்து மாநில முதல்வர்கள் நாகாலாந்து நெய்புரியோ, மிசோரம் சோரம்தங்கா, அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா ஆகியோருடன் தொலைபேசியில் அவர் ஆலோசனை நடத்தினார்.

*எனது மாநிலம் பற்றி எரிகிறது; மேரிகோம்
குத்துச் சண்டை போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த எம்பி மேரி கோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது. அதனை காப்பாற்ற உதவுங்கள். மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது டிவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

*மோடிக்கு ராகுல் வேண்டுகோள்
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி வௌியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் மிகவும் வேதனை அளிக்கிறது. மக்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும். மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தி, அமைதி மற்றும் இயல்பு நிலைமையை மீட்டெடுக்க பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இரு சமூகத்தினர் பேரணியால் வெடித்தது பயங்கர வன்முறை மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு: இணையதள சேவைகள் துண்டிப்பு, 8 மாவட்டங்களில் 144 தடை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Governor No. Ganesan ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தேர்தல் நெருங்கும்...