×

தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சிக்கு தாவ தயாராக இருக்கும் முக்கிய நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் மாஜி அமைச்சர் எந்த அணியில் இருந்து எந்த அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் இனி நுழையவே முடியாது. கோர்ட்டில் எத்தனை கட்டுகளை ஆதாரமாக தாக்கல் செய்தாலும் தன்னால் மீண்டும் இலை கட்சியில் நுழைய முடியாது என்ற நிலைமைக்கு தேனிக்காரர் வந்துட்டாராம். அதை கர்நாடக தேர்தலில் பவர்புல் ஒன்றிய அமைச்சர் சூசகமாக ஒற்றை வரியில் சொல்லிட்டாராம். இது உள்கட்சி பிரச்னை நாங்க தலையிட மாட்டோம் என்ற வார்த்ைதய கேட்ட தேனிக்காரர் அதிர்ச்சியின் உச்சத்துக்கு போயிட்டாராம். தொட்டதெல்லாம் துலங்கலையாம். எந்த பக்கம் திரும்பினாலும் அடி மேல் அடி விழுதாம். அரசியலில் தொய்வு என்பது இருக்கவே கூடாது. 10 தொண்டர்கள் இருந்தாலும் 10 ஆயிரம் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் எத்தனை பேர் தன் பின்னால் உள்ளார்கள் என்பதை வெளியே சொல்லாமல் என் பின்னால் தான் உண்மையான இலை கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பில்டப் கொடுக்க வேண்டும். அதே பார்முலாவை தேனிக்காரர் பின்பற்றி, தன் அணிக்கு புதுசு புதுசா நிர்வாகிகளை நியமிச்சிக்கிட்டு வர்றாராம். இதற்கிடையில், மாங்கனி நகரில் இருக்கும் அவரது கோஷ்டியினரை கூண்டோடு தூக்க வலைவீசி இருக்காங்களாம். ஆனா, எங்களை தூக்க யாரும் வேண்டாம், எங்களது மாவட்ட செயலாளரே தூக்கிடுவாருன்னு தேனிக்காரரின் ஆதரவாளர்கள் கிண்டலாக சொல்றாங்களாம். இப்படித்தான் சேலத்துக்காரருக்கு ரொம்பநாளா கார் ஓட்டிக்கிட்டிருந்த பகுதி செயலாளர் ஒருத்தரையே பதவியில் இருந்து தூக்கிட்டாராம். இந்த நிலையில் லேடி நிர்வாகி ஒருத்தரு, நாலு பேரை சேலத்துக்காரர் பக்கம் கொண்டு போக முடிவு செஞ்சிருக்காரு. இதனை தெரிஞ்சிக்கிட்ட தேனிக்காரரின் அணியை சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர் சந்தேகப் பட்டியலில் இருக்கும் 16 பேரை மேட்டூருக்கு ெகாண்டு போயிட்டாராம். அணையில் உள்ள விதவிதமான மீன் வருவலுடன் சேர்த்து, மயங்கும் வரைக்கும் வெளிநாட்டு தண்ணீயை வாங்கி கொடுத்தாராம்… இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒரு கும்பல் சேலம்காரரை போய் சந்தித்து உங்கள் அணியில் இணைகிறோம்னு சொல்றாங்களாம். இதை கேட்ட தேனிக்காரர் ஷாக் ஆனது மட்டுமில்லாமல் இனி யாரும் எதிர்முகாமிற்கு போகாதவாறு அணை கட்டச் சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மரங்களை வெட்டி கரன்சி பார்க்கும் கும்பலின் லீலைகளை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்தில் காட்டுப்பாடியில, கசமான ஏரியா இருக்குது. இந்த ஏரியாவுல அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் அமைப்பு ஒன்று பராமரித்து வருது. இந்த இடம் லீஸ் முடிஞ்சு 8 வருஷத்துக்கு மேல ஆகுதாம். ஆனால், இந்த இடத்துல இருந்து, 47 மரங்களை வெட்டி கடத்தி சில லட்சங்களை கடத்தல் கும்பல் சேர்த்து இருக்காம். கடந்த வாரம் மரங்களை வெட்டும்போது அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு சிறைபிடிச்சாங்க. இதையடுத்து சம்பவ இடத்துல காக்கிகள் சென்று மரம் வெட்ட பயன்படுத்திய ஜேசிபி, லாரிகளை பிடிச்சாங்க. ஆனா, அந்த கும்பல் தப்பிச்சிடுச்சு. மரங்களை வெட்ட உள்ளூர்காரர்கள் கூப்பிட்டா பிரச்னையாகிடும்னு, ஆந்திராவுல இருந்து கூலி ஆட்களை அழைச்சிகிட்டு போயி, வெட்டி கடத்தியிருக்காங்க. லீஸ் முடிஞ்ச அரசு இடத்தை, மீட்டு, மரங்களை வெட்டுற கும்பலை பாரஸ்ட் அதிகாரிகள், காக்கி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாநிலத்தின் கோடியில் உள்ள மாவட்ட இலை கட்சி விஐபி ஏன் டென்ஷனில் இருக்காரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும், இலை கட்சி இரு அணியாக பிரிந்த பின்னர் தேனிக்காரரின் தீவிர ஆதரவாளராக விளங்கியவருமான மன்னர் பெயரை கொண்டவர், இப்போது மனம் மாறிவிட்டாராம். தேனிக்காரருக்கு செல்வாக்கு குறைந்து வருவதாக கணக்கு போட்டாரோ என்னவோ சேலம்காரரின் அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளாராம். ஓரிரு நாளில் சேலம்காரருடன் திடீர் சந்திப்பு இருக்கும் என்கிறார்களாம். இலை கட்சியில் முக்கிய பொறுப்பை எதிர்நோக்கியே காய்களை நகர்த்தி வருகிறாராம். அதற்கு மாவட்டத்தில் உள்ள சீனியர் தலைவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். குமரி மாவட்டத்தில் தேனிக்காரரின் பிரதான அடையாளமாக விளங்கியவர் தற்போது அணி மாற திட்டமிட்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் இலை கட்சி மீண்டும் பரபரப்பில் உள்ளதாம். இதனால் அடுத்த மாவட்ட செயலாளர் நான்தான் என்று கணக்கு போட்டு வைத்திருந்த முன்னாள் அமைச் சரான ‘கிரீன்’ டென்ஷனில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எலி பொறியில் சிக்கி இருப்பதை போல இரண்டு அதிகாரிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாமே, அவங்க யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் இலைக்கட்சி ஆட்சியின்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படாமல் இருந்தாங்க. இதனால உள்ளாட்சிகளில் அதிகாரிகளின் ராஜ்ஜியம்தான் நடந்து வந்தது. குறிப்பாக, கோவை மாநகராட்சியில் இது உச்சகட்டத்தில் இருந்ததாம். 2019-20ம் நிதியாண்டில், இலைக்கட்சி ஆட்சியின்போது கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 4 வார்டுகளில் 16 தார்சாலைகள் போடப்பட்டதாகவும், இதற்கு ரூ.1.98 கோடி செலவிட்டதாகவும் செலவு கணக்கு ‘புக்’ல இருக்காம். இந்த விவகாரம் தற்போது வெளியே கசிந்துள்ளதாம். இதற்கு யார் காரணம், இந்த தில்லுமுல்லு பின்னால் உள்ள அதிகாரிகள் யார் என தற்போதைய மாநகராட்சி கமிஷனர், விசாரணையை தொடங்கி இருக்கிறாராம். முதல்கட்ட விசாரணையில், நான்கு எழுத்து பெயர் கொண்ட இரு உதவி செயற்பொறியாளர்கள்தான் காரணம் என தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது கோவை மாநகராட்சியில் பணியில் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இடமாறுதலாகி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றுவிட்டாங்க. அந்த ஊழல் அதிகாரிகளை பிடித்து அவர்கள் எங்கு பணிபுரிந்தாலும், தேடி கண்டுபிடித்து, அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சிக்கு தாவ தயாராக இருக்கும் முக்கிய நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kilagodi ,wiki ,Yananda ,Maji ,Party ,Peter Mama ,Kadagodi ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...