×

பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையில் தடுப்பு அமைத்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக மீண்டும் அங்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்து நடைபாதையில் பலர் கடைகளை அமைத்தனர். இதனை பலமுறை அகற்ற அதிகாரிகள் வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், 59வது வார்டு உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தலைமையில், பகுதி செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று பாரிமுனை போலீசார், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பாரிமுனை காவல் நிலையத்திலிருந்து குறளகம் சந்திப்பு வரை சாலையை ஆக்கிரமித்து இயங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். பாரிமுனை பகுதியில் மொத்த வியாபாரம், பூ வியாபாரம், பழ வியாபாரம் நடைபெறுகிறது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. திருட்டு சம்பவங்களும் அதிகம் நடைபெறுகிறது. இதனை மாநகராட்சியும், காவல்துறையும் கண்காணித்து வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Barimuna NSC Bose Road ,Thandaiyarpet ,Dinakaran ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...