×

தி.நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

சென்னை: தி.நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறக்க உள்ளார். இதன்மூலம் அப்பகுதியில் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும், என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி தி.நகர். சென்னை மட்டுமல்லாது சென்னை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பொருட்களை வாங்க பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தி.நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வேலைக்குச் செல்வோரும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பகுதியாக தி.நகர் விளக்குகிறது.

சென்னையின் மிகப் பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, தி.நகர் பேருந்து நிலையத்திற்கோ அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கோ செல்வது என்பது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல. ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டிபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிக பகுதிக்கு வருவோரும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்வதால், தி.நகர் என்றாலே எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படக்கூடிய பகுதியாகவே உள்ளது.

இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனால், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நடைமேம்பாலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள தூண்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும், படிக்கட்டுகளில் வர்ணங்களும் பூசப்பட்டு வருகிறது.

இதேபோன்று, ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தியாகராய நகர் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் உஸ்மான் சாலையில் தலா ஒரு மின் தூக்கி அமைக்கப்பட்டுள்ளது. மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க முடியும். இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். எனவே, தி.நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பல்வேறு வசதிகள்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தி.நகர் நடைமேம்பால பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அழகிய வடிவமைப்பில் 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ளளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் இதுதான். இந்த நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு, பொது முகவரி அமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை உள்ளன. பாலம் திறக்கப்பட்டப் பின்பு, சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு தினசரி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

சிறப்பம்சங்கள்
* தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரயில் நிலையம் வரை செல்லலாம்.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
* 570 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் என சுமார் ஒன்றரை கி.மீ., நீளம் கொண்டது.
* மாற்று திறனாளிகள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலி வசதி.
* தி.நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி எஸ்கலேட்டர்.
* உஸ்மான் சாலையில் லிப்ட் வசதி.

The post தி.நகரில் நெரிசலை குறைக்கும் வகையில் இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Dt. India ,Ahaya walkway ,Chennai ,T. ,Chief Minister of ,India ,Aagai ,G.K. Stalin ,CM ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...