×

தூத்துக்குடி அருகே 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டுக் கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி, சென்னை தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி மாணவர் பிரபாகர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், ராஜாவின்கோவில் ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராஜாவின்கோவில் குலசேகரநாதர் என்னும் பெருமாள் கோயிலில் சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டுக் கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் சடையவர்மன் குலசேகரன், அவரது தந்தை மாறவர்மன் ஸ்ரீவல்லபன் ஆகியோர் கல்வெட்டுக்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது. துண்டு கல்வெட்டான இது சடையவர்மன் குலசேகரனின் (1162-1177). இரண்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் ஊரின் பெயர் அழகியபாண்டியபுரம் என்றும், கோயிலுக்கு இறையிலி தேவதானமாக தானம் வழங்கப்பட்டதையும் உவாப்படி என்ற திருநாளன்று இத்தானத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு வாசகப்படி கல்வெட்டு 1164ம் ஆண்டு, அதாவது 859 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாகும். கோயில் பாண்டியர் கட்டிடக் கலையை பறைசாற்றும் விதமாக முழுவதும் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதனை கற்றளி என்று குறிப்பிடுவர். பாண்டியர் கால கற்றளிகள் வெகு குறைவாகவே காணப்படுகிறது. எனவே இந்த கோயில் பாண்டியர் கற்றளி வரிசையில் சிறப்பான இடத்தை பெறுகிறது.

இந்த கல்வெட்டில், குலசேகரதேவருக்கு யாண்டு 1வதின் எதிராமாண்டு குலசேகரமுடைய நாயனாருக்கு கூவாப்படி திருநாள் னென அழகியபாண்டியபுரத்து பரிசகத்து விலையாக இறையிலி தேவதானம் விலைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள துண்டு கல்வெட்டு ஒன்றில் ஊரின் பெயர் பொதியம்புத்தூர் என்று குறிப்பிடுகிறது. சடையவர்மன் ஸ்ரீ வல்லவன் கல்வெட்டில் சீவல வளநாடு என்று பாண்டிய நாட்டு பிரிவினை குறிப்பிடுகிறது என்றார். தொடர்ந்து புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவிலில் நடைபெற்ற கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் திவ்யா, சோமேஸ்வர பட்டர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி அருகே 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thuthukudi ,Tirunelveli Historical Cultural Field Inspection Center ,Toothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...