×

ஓட்டல் அதிபர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சாமி சிலைகள் மீட்பு: தந்தை, மகன் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே ஓட்டல் அதிபர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சுவாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத்தெருவில் ஓட்டல் நடத்தி வருபவர் கண்ணன்(55). இதனுடன் வீடும் இணைந்து உள்ளது. இவரது வீட்டில் பழங்கால சுவாமி சிலைகளை பதுக்கி வைத்து இருப்பதாக திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார் சிலைகளை வாங்க வந்தது போல், நேற்று மாலை அங்கு சென்று விசாரித்தனர்.அப்போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அரை அடி உயர ஐம்பொன் தன்வந்திரி சிலை, ஒரு அடி உயர அம்மன் வெண்கல சிலை, பழங்கால ஐம்பொன் நாணயங்கள் 3, அரை கிலோ எடை கொண்ட ஐம்பொன் கால சக்கரம் ஆகியவற்றை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு பல ேகாடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் கண்ணன், அவரது மகன் சூர்யா(25) ஆகிய இருவரையும் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டையில் பழமைவாய்ந்த பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அகத்தியருக்கு தனி சன்னதி உள்ளது.

இக்கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளை அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்து விற்பனை செய்யும்படி கூறியது விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கண்ணனின் மகன் சூர்யாவின் செல்போனில் பழங்கால சாமி சிலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளன. எனவே இவர்கள் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்தார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓட்டல் அதிபர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சாமி சிலைகள் மீட்பு: தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Aimbon ,Citel ,Tiruvarur ,Aimbon Swami ,Thiruvarur ,Aimbon Sami ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது