×

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த 55 இடங்களில் பார்க்கிங்: பக்தர்கள் விரைவாக தரிசிக்க சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 55 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நாளை நடக்கிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி, நாளை இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்லும் வாய்ப்பு சித்ரா பவுர்ணமி நாளில் இருப்பதால் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நகரின் முக்கிய சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை அருகே வருவதற்கு வசதியாக 123 இணைப்பு பஸ்கள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 85 இடங்களில் மருத்துவ குழுக்கள், 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு, 34 இடங்களில் காவல் உதவி மையங்கள், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள், 4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள், சுமார் 12 ஆயிரம் கார், வேன்களை நிறுத்தும் வசதியுடன் 55 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, வரிசை முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவை தனித்தனியே ராஜகோபுரம் மற்றும் திட்டி வாசல் வழியாக அனுமதிக்கவும், தரிசனம் முடிந்ததும் பே கோபுரம் வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மோர் ஆகியவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. அன்னதானம் வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 120 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர், நாளை அதிகாலை 3.45 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும். விழுப்புரத்தில் இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும், பின்னர், அதிகாலை திருவண்ணாமலையில் 3.30 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

அதேபோல், 5ம் தேதி காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, 11 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இது தவிர, விழுப்புரம் – திருப்பதிக்கு தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. நேர மாற்றம் இல்லாமல் வழக்கமான கால அட்டவணைப்படி இந்த ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா: 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த 55 இடங்களில் பார்க்கிங்: பக்தர்கள் விரைவாக தரிசிக்க சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami Festival ,Tiruvannamalayan ,Tiruvannamalai ,Chitra Bournami Festival ,Thiruvannamalai ,Thiruvannamalayam ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...