×

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வெற்றி உள்ளிட்ட கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றியை எதிர்த்து, கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதே தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

இதற்கிடையில் வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எம்.பி.கனிமொழி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் கனிமொழி எம்பி தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடி தேர்தல் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்து, அந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.எம்.திரிவேதி அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்கிறது. அதே நேரத்தில், அவரது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து கனிமொழி எம்பிக்கு எதிராக தொடர்ப்பட்ட அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வெற்றி உள்ளிட்ட கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Suprem ,New Delhi ,Suprem Court ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...