×

சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் இதுவரை மாற்றப்படாத நகராட்சி பெயர் பலகைகள்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் திருத்தங்கல் மண்டலத்தில் பெரும்பாலான பெயர் பலகைகள் மாற்றப்படாமல் நகராட்சி என்றே உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரமான சிவகாசியோடு சுமார் 4 கிலோ மீட்டர் அருகில் உள்ள கோயில் நகரான திருத்தங்கல் நகரம் சிவகாசி நகரோடு இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருத்தங்கல் என்ற நகராட்சி, 55 ஆண்டுகாலம் நிர்வாகத்திற்கு பிறகு சிவகாசியோடு இணைக்கப்பட்டது.

சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அரசாணை வெளியிடப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஏறத்தாழ 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்றுவரை திருத்தங்கல் நகராட்சியில் பல்வேறு பெயர் பலகையில் மாநகராட்சி என்று மாற்றப்படாமல் உள்ளது. மதுரை, விருதுநகரில் இருந்து சிவகாசி நகருக்குள் வருபவர்களை வரவேற்கும் விதமாக விருதுநகர் – திருத்தங்கல் சாலையில் ‘திருத்தங்கல் நகராட்சி தங்களை இனிதே வரவேற்கிறது’ என்று பலகை உள்ளது. சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் இன்றுவரை வரவேற்பு பெயர் பலகையில் உள்ள திருத்தங்கல் நகராட்சி என்றே உள்ளது.

மாநகர் நுழைவு பகுதியில் சிவகாசி மாநகராட்சி தங்களை வரவேற்கின்றது என்று கூட எந்த இடத்திலும் பெயர் பலகைகள் பெயரளவில் கூட வைக்கப்படாமல் உள்ளது. திருத்தங்கல் முடிந்து சிவகாசி நுழைவு பகுதியில் உள்ள சிவகாசி மாநகராட்சி வரவேற்பு பெயர் பலகையும் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் திருத்தங்கல் நகராட்சியாக இருந்த போது நகராட்சி முழுவதிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வசதிக்காக தெரு பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. வார்டுகள் வரைமுறை செய்யப்பட்டு சிவகாசி மாநகராட்சியோடு திருத்தங்கல் இணைக்கப்பட்ட பிறகும் இன்றுவரை சாலைகளின் பெயர் பலகைகள் மாற்றப்படாமல் உள்ளன.

பழைய வார்டு பெயரில் திருத்தங்கல் நகராட்சி என்றே நகர் முழுவதிலும் பெயர் பலகைகள் உள்ளன. பயன்பாடற்ற இந்த பெயர் பலகைகளை அகற்றிவிட்டு புதிய வார்டு கொண்ட பெயர் பலகைகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருத்தங்கல் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் திருத்தங்கல் நகராட்சியாக இருந்த போது சுகாதார பணிகளுக்காக பேட்டரி வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் வாங்கப்பட்டன. இதில் பெரும்பாலான வாகனங்கள் பராமரிப்பு இன்றி உள்ளன. சுமார் 11 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் சமீபத்தில் எப்சிக்கு சென்று வந்த ஒரு வாகனத்தில் மட்டும் சிவகாசி மாநகராட்சி என்று எழுதப்பட்டுள்ளது.

மற்ற வாகனங்களில் திருத்தங்கல் நகராட்சி என்றே இன்றும் உள்ளது. இந்த வாகனங்களை பார்க்கும் பொதுமக்கள் திருத்தங்கல் நகராட்சி என்றே மனநிலையிலேயே உள்ளனர். சிவகாசியின் நுழைவு பகுதி திருத்தங்கல்லில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்ட் செயல்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த பெயரளவு பஸ் ஸ்டாண்டில் கூட பெயர் மாற்றம் செய்யப்படாமல் பெயர் பலகை திருத்தங்கல் நகராட்சி என்றே உள்ளது.

சிவகாசிக்கு வரும் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் இந்த பஸ் ஸ்டாண்டை தாண்டிதான் சிவகாசிக்குள் நுழைகின்றனர். சிவகாசி மாநகராட்சியின் இந்த அடையாள பஸ் ஸ்டாண்ட் பெயர் பலகையை உடனடியாக சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து திருத்தங்கல் பகுதி மக்கள் கூறும்போது, திருத்தங்கல் நகர் பகுதியில் உள்ள அனைத்து நகராட்சி பெயர் பலகைகளும் மாநகராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

திருத்தங்கல் மண்டலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மாநகராட்சியின் புதிய ஆணையாளர் புதுவித உத்வேகத்துடன் செயல்பட்டு வருவது பொதுமக்களிடத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெயர் பலகையிலும் புதிய ஆணையாளர் தலையிட்டு புதிய மாநகராட்சி பெயர் பலகைகள் உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பிரமாண்ட பெயர்பலகை நுழைவு பகுதிகளில் வருமா?

வரவேற்பு பெயர் பலகைகள், சாலைகளின் பெயர் பலகைகள், துப்புரவு வாகனங்கள் என பல்வேறு பெயர் பலகைகள் மாற்றப்படாமல் திருத்தங்கல் நகராட்சி என்றே உள்ளன. இதனால் திருத்தங்கல் மக்களுக்கு நகராட்சி என்ற மனநிலையே இருந்து வருகின்றது. பெயர் பலகைகளை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருதுநகர், திருவில்லிபுத்தூர், சாத்தூர் வெம்பக்கோட்டை நுழைவு பகுதிகளில் சிவகாசி மாநகராட்சி தங்களை வரவேற்கின்றது என்ற பிரமாண்டமான பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் திருத்தங்கல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் இதுவரை மாற்றப்படாத நகராட்சி பெயர் பலகைகள் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Shivakasi ,Sivagasi ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!