×

வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா? மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே தர்மராஜபுரம் குறுக்கே மூல வைகை ஆறு உள்ளது. இந்த மூல வைகை ஆற்றையொட்டிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கும் இப்பாதை மிகவும் எளிமையான பாதையாக உள்ளது.

இதே போல் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் வண்டியூர் கிராமம் அமைந்துள்ளது. தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து வண்டியூருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே மூல வைகை ஆறு செல்கிறது.
இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்ற நாட்களில் பள்ளி மாணவ-மாணவிகள் கயிறு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் தற்போது வரை புதிய பாலம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே வண்டியூர் கிராமத்திற்கான சுடுகாடு மூலவகை ஆற்றங்கரையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகம் உள்ள நாட்களில் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் சடலத்தை ஆற்று நீரில் மிதக்க வைத்து எடுத்து வந்து பின்னர் சுடுகாட்டில் அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து வண்டியூருக்கு மற்றொரு சாலை உள்ளது. ஆனால் அந்த சாலையில் சென்றால் 6 கிலோமீட்டர் தொலைவு கூடுதலாக பயணம் செய்ய வேண்டியது உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வண்டியூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே செல்லும் மூலவைகை ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறதித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மலைக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய அரசு பள்ளி கட்டிட பணிகள், புதிய வகுப்பறை கட்டும் பணிகள், பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது.

அதுபோல், எங்கள் பகுதியில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்’’ என்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘‘இப்பகுதியில் பாலம் கட்டப்பட்டால் விவசாயிகள் விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும், மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் ஆற்றை கடந்து செல்வதற்கும் மிகவும் சிரமம் இல்லாமல் இருக்கும்’’ என்றார்.

இதுகுறித்து தும்மக்குண்டு முன்னாள் ஊராட்சி தலைவர் மாடசாமி கூறுகையில், ‘‘கடந்த 60 ஆண்டு காலமாக பாலம் வசதி வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை கலெக்டரிடம் சந்திந்துள்ளனர். ஆனால் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா? மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Varasanadu ,Varavaiga ,Malaikirama ,Raw Vaigai River ,Annuadu ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது