×

கொடைக்கானல் பகுதியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு 2 மலைக்கிராமங்கள் துண்டிப்பு : மக்கள் தவிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்றை கடக்க முடியாததால் 2 மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள், போக்குவரத்துக்கு வழியின்றி தவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த மலைக்கிராமங்களுக்கு கொடைக்கானலில் இருந்து சாலை வசதி கிடையாது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறையை அடுத்துள்ள மலைச்சாலை வழியாக சுமார் 15 கிமீ தூரம் நடந்து, இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்த மலை கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் அன்றாட தேவைகளுக்கும், மருத்துவ வசதி பெறுவதற்கும் பெரியகுளத்திற்கு செல்கின்றனர். இந்த கிராமங்களில் இருந்து பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில் குப்பம்பாறை என்ற பகுதியில் கல்லாறு என அழைக்கப்படும் காட்டாறு உள்ளது.

இந்த ஆற்றை கடந்துதான் மக்கள் சென்று வருகின்றனர். இந்த ஆற்றில் பாலம் ஏதும் கட்டப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், அதனை கடக்க முடியாமல் சின்னூர் மற்றும் பெரியூரை சேர்ந்த மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக பெரியகுளம் செல்ல முடியாமல் கிராமங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலங்களில் அடிக்கடி கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளம் வடிந்த பின்னர்தான் ஆற்றை கடந்து செல்ல முடியும். கல்லாற்றை கடந்து செல்ல நிரந்தரப்பாலம் கட்ட வேண்டும். மேலும் எங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அத்தியாவசிய பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றனர்.

The post கொடைக்கானல் பகுதியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு 2 மலைக்கிராமங்கள் துண்டிப்பு : மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodicanal ,Kodhikanal ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...