×

தமிழக வனப்பகுதிக்குள் அரிசிக்கொம்பன் இல்லை : வனத்துறையினர் தகவல்

கூடலூர் : பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கண்ணகி கோயில் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதிக்குள் இல்லை என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னகானல் பகுதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியான கண்ணகி கோயில் வனப்பகுதிக்குள் திறந்து விட்டனர்.

இந்த வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டு கேரள வனத்துறையின் கண்காணிப்பு மையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் மதியம் முதல் அரிசிக்கொம்பன் சிக்னல் தடைபட்டது. இதனால் அரிசிக்கொம்பன் தமிழக வனப்பகுதியான வண்ணாத்திப்பாறை பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இதனால் தமிழக எல்லையோர விவசாயிகளுக்கு ஆபத்து என்றும், சில சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதனால் எல்லையோர விவசாயிகள் கலக்கமடைந்தனர். ஆனால் கண்ணகி கோயில் வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதிக்குள் இல்லை என தமிழக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அரிசிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதியான வண்ணாத்திப்பாறை பகுதிக்கு வந்ததாக சிலர் புரளி கிளப்பியுள்ளனர். 12 கிமீ தள்ளி அரிசிக்கொம்பன் விடப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான உணவு வகைகள் மலைமேல் இருப்பதால், இங்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடர்ந்த வனப்பகுதி மற்றும் மேகமூட்டமான வானிலை காரணமாக ரேடியோ காலர் சிக்னல் வருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். நேற்று காலை கேரள வனத்துறையின் கண்காணிப்பு மையத்தில் தடைபட்ட சிக்னல் மீண்டும் வரத் தொடங்கி உள்ளது. அதன்படி அரிசிக்கொம்பன் இப்போது மாவடி வனப்பகுதிக்கு மேல் பகுதியான மேதகானமெட்டு வனப்பகுதியில் உள்ளது என தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழக எல்லைக்குள் அரிசிக்கொம்பன் வரலவில்லை. எல்லைப்பகுதியில் தமிழக வனத்துறையினரும் புதிதாக யானை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.

The post தமிழக வனப்பகுதிக்குள் அரிசிக்கொம்பன் இல்லை : வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kuddalur ,Arikkomban Elephant ,Ganagi Temple ,Periyaru Tigers ,TN ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...