×

தங்கப்பல்லக்கில் மதுரை கிளம்பினார் அழகர்

வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்

வைகையாற்றில் நாளை இறங்குவதற்காக, தங்கப்பல்லக்கில் மதுரைக்கு அழகர் புறப்பட்டு சென்றார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. முதலில் விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. காலை 6 மணிக்கு பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர் பெரிய தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் சிறிய தேருக்கு எழுந்தருளினார்.

காலை 6.35 மணிக்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் அருணாச்சலம் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய…’ என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 5 கிமீ சுற்றளவுள்ள 4 மாசி வீதிகளிலும் தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை பார்வையிட்டு, சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவையொட்டி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடக்கிறது. இதற்காக நேற்று மாலை 6 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் அழகர் , கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு சகல பரிவாரங்களுடன், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் முன்பு வந்து, மதுரையை நோக்கி புறப்பட்டார். இரவு 8 மணிக்கு பொய்கைகரைப்பட்டியிலும், 9.30 மணிக்கு, கள்ளந்திரியிலும், 11.30 மணிக்கு அப்பன்திருப்பதியிலும் சாரை சாரையாக பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

இன்று இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குள் செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை (மே 5) அதிகாலை 12 மணிக்கு மேல், தங்கக்குதிரை வாகனத்தில் அழகர், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக்கொண்டு எழுந்தருளுகிறார். காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்குகிறார். அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வர்.

The post தங்கப்பல்லக்கில் மதுரை கிளம்பினார் அழகர் appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Madurai ,Thangapallak ,Vaigai river ,Alagar ,Meenakshiyamman Temple ,Dinakaran ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை