×

திருவாரூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள், பழங்கால நாணயங்கள் மீட்பு; இருவரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கரைவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சூர்யா. வயது 23. இருவரும் உணவகம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இவர்களது வீட்டில் சாமி சிலைகள், பழங்கால நாணயங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில், திருச்சியில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா, திருச்சி குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில் 2 குழுக்கள் திடீரென கண்ணன் வீட்டில் ஆய்வு நடத்தியது.

அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 1000 ஆண்டுகள் பழமையான தன்வந்தரி சிலையை மீட்டனர். இதேபோன்று அரை அடி அளவில் ராக்காயி அம்மன் சிலையும் மீட்கப்பட்டுள்ளது. 1010 ஆண்டுகள் பழமையான இரண்டு நாணயங்களும், ஒரு காலசத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், தந்தை, மகன் இருவரையும் கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சிலையானது விற்பனைக்காக மண்ணாவடி பகுதியை சேர்ந்தவர் கொடுத்ததாகவும் ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

The post திருவாரூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள், பழங்கால நாணயங்கள் மீட்பு; இருவரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Prevention of Statue Smuggling Division ,Tiruvarur ,Sami ,Nannilam ,Thiruvarur district ,
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!